டிக்கெட் விலையை எக்குத்தப்பாக ஏற்றிய திரையரங்கு உரிமையாளர்கள்? ரசிகர்கள் கண்டனம்…
Author: Prasad12 August 2025, 3:52 pm
எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வெற்றிதனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதனால் டிக்கெட் கிடைக்காத பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
“கூலி” திரைப்படம் டிக்கெட் புக்கிங்கில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் கூலி படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் ரூ.17 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. வட அமெரிக்காவில் இது போன்ற வசூல் சாதனையை செய்த முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
எக்குத்தப்பாக எகிறிய டிக்கெட் விலை
இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எந்தளவுக்கு எகிறியுள்ளதோ அதே அளவுக்கு இத்திரைப்படத்தின் டிக்கெட் விலையும் எகிறியுள்ளது. பொதுவாக சிங்கிள் ஸ்கிரீன்களில் ரூ.130 தான் டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போது “கூலி” திரைப்படத்திற்கு திருச்சி திரையரங்குகளில் ரூ.190 டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களின் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
எப்போதும் ரசிகர் மன்ற காட்சிகளில் ரூ.500, 1000 என டிக்கெட் விலை இருக்கும். ஆனால் மற்ற காட்சிகளுக்கு வழக்கம் போல் இருக்கும் விலையே நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் “கூலி” திரைப்படத்திற்கு 190 ரூபாய் டிக்கெட் விலையை ஏற்றியது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
