பந்தயத்தில் மாஸ் ஹீரோக்கள் படங்கள்..! வெற்றிவாகை சூடப்போகும் நாயகன் யார்.?

Author: Rajesh
31 January 2022, 6:51 pm
Quick Share

ஒமிக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவியதை அடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதனால் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த பல முன்னணி நடிகர்களின் படங்கள் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து படங்களை வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில், விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல், விஜய்சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ உள்ளிட்ட படங்கள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகிறது. 2 வருட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 11 அல்லது மார்ச் 18-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாஸ் ஹீரோ விஜயின் நடிப்பில் உருவாகி வரும் மாஸ் திரைப்படமான ‘பீஸ்ட்’, யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ஆகிய படங்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாஸ் ஹீரோக்கள் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை அடுத்த இரண்டு மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த பந்தயத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்..

Views: - 528

0

0