சௌபினை பார்த்து வழுக்கை தலை என கூறிய ரஜினிகாந்த்? ட்ரோல்களுடன் களமிறங்கிய நெட்டிசன்கள்…
Author: Prasad12 August 2025, 11:28 am
எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வெற்றிதனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்து மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதனால் டிக்கெட் கிடைக்காத பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
“கூலி” திரைப்படம் டிக்கெட் புக்கிங்கில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் கூலி படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் ரூ.17 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. வட அமெரிக்காவில் இது போன்ற வசூல் சாதனையை செய்த முதல் தமிழ் திரைப்படம் இதுதான் ஆகும்.

மலையாளத்தின் முன்னணி நடிகர்
மலையாள சினிமா உலகில் மிகவும் வித்தியாசமான மற்றும் யதார்த்தமான நடிகராக வலம் வருபவர் சௌபின் சாஹிர். “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் இவரது நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் இவர் “கூலி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வழுக்கை தலை என கூறிய ரஜினி?
இந்த நிலையில் “கூலி” திரைப்பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், அத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரை பற்றி பேசும்போது சௌபின் சாஹிரை பற்றி பேசத்தொடங்கினார். அப்போது அவர், “கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர்தான் நடிக்கிறார் என சௌபினை அழைத்து வந்தார்கள். அவரை பார்த்தபோது இவர் யாருங்க எந்த படத்தில் நடித்திருக்கிறார்? என கேட்டேன். மஞ்சும்மல் பாய்ஸ் என்று கூறினார்கள். இவர் என்ன வழுக்கைத் தலையோடு இருக்கிறார். இவர் எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என கேட்டேன். அதற்கு அவர்கள், சௌபின் நல்ல நடிகர் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு அப்போது நம்பிக்கை இல்லை” என கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும், “ரஜினிகாந்த் மட்டும் என்ன முடியோடு இருக்கிறாரா என்ன?” என ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர். எனினும் அவ்விழாவில் ரஜினிகாந்த் “சௌபின் மற்ற படங்களில் நடித்த சில காட்சிகளை பார்த்தேன். அவர் மிகச்சிறந்த நடிகர்” எனவும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
