நடிகர் சௌபின் சாஹிர் துபாய் செல்ல தடை? அப்படி என்னதான் சிக்கல் அவருக்கு?
Author: Prasad2 September 2025, 3:55 pm
மஞ்சும்மல் பாய்ஸ் நிதி மோசடி வழக்கு
“மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் சௌபின் சாஹிரின் நடிப்பை பலரும் பாராட்டி பேசியிருந்தனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் சௌபின் சாஹிரும் ஒருவர். இந்த நிலையில் கேரளா மாநிலம் அரூரை சேர்ந்த சிராஜ் என்பவர், “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படம் வெளியான பிறகு தனக்கு வாக்களித்த படி லாபத்தில் 40 சதவீத பங்கு கிடைக்கவில்லை எனவும் எர்ணாக்குளம் சார்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். எனினும் இந்த வழக்கில் இருந்து சௌபின் சாஹிர் உள்ளிட்ட “மஞ்சும்மல் பாய்ஸ்” பட தயாரிப்பாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமீன் பெற்றனர். மேலும் கேரள உயர்நீதிமன்றம் அவர்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையும் “மஞ்சும்மல் பாய்ஸ்” நிதி மோசடி குறித்து சௌபின் சாஹிரிடம் விசாரணை நடத்தியது.

துபாய் போக தடை
இந்த நிலையில் துபாயில் நடக்கவிருக்கும் விருது விழா ஒன்றிற்கு செல்ல அனுமதி கேட்டு சௌபின் சாஹிர் கொச்சி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால் நிதி மோசடி வழக்கில் ஒரு முக்கியமான சாட்சி வெளிநாட்டில் இருப்பதால் அவரை சௌபின் சந்தித்தால் விசாரணை பாதிக்கக்கூடும் என அரசு தரப்பு வாதிட்டதால் சௌபின் சாஹிர் துபாய் செல்ல தடை விதித்து கொச்சி மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை தொடர்ந்து துபாய் செல்ல அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சௌபின் சாஹிர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சௌபின் சாஹிர் துபாய் செல்ல தடை விதித்துள்ளது மலையாள திரை உலகில் பேசுபொருளாகியுள்ளது.
