காலணி சர்ச்சை… மன்னிப்பு கோரிய விக்னேஷ் சிவன் : தவறுக்கு இதுதான் காரணம்… தேவஸ்தானத்திற்கு பரபரப்பு கடிதம்..!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 9:06 am
Quick Share

திருப்பதி: நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு தேவஸ்தானத்திற்கு நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் கடிதம் எழுதினார்.

திருமணம் முடிந்த பின் நேற்று திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவைகள் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி கோவில் முன் போட்டோ ஷூட் நடத்தினார்கள். அப்போது அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள அந்தப்பகுதியில், காலணியுடன் போட்டோ ஷூட் நடத்தியது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் இதுபற்றி தொலைபேசி மூலம் விக்னேஷ்சிவனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், இது தெரியாமல் நடந்த தவறு என்றும், எனவே நடந்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வகையில் கடிதம் அல்லது வீடியோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வெளியிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் இரண்டு பேரும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் மீண்டும் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் சுப்ரபாதம் சேவையில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு அனுப்பியிருக்கும் கடிதம் ஒன்றில், திருமணம் நடந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அதன்பின் கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர்.

எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்ததால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். இதனால் ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம்.

இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். திருப்பதி மலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை திருப்பதி மலைக்கு இரண்டு பேரும் வந்திருக்கிறோம். பல்வேறு காரணங்களால் திருப்பதி மலையில் எங்கள் திருமணத்தை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது, என்று அதில் கூறியிருக்கிறார்.

Views: - 576

1

0