பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பவரா நீங்கள்… அப்போ காசு கொடுத்து வியாதியை வாங்குபவர் நீங்க தான்…!!!

28 November 2020, 5:31 pm
Paper Cup - Updatenews360
Quick Share

பேப்பர் கப்பில் அடிக்கடி டீ, காபி குடிப்பவரா நீங்கள்… அது உங்கள் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா…??? பேப்பர் கப்பில் டீ அல்லது காபி குடிக்கும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கையும் சேர்த்து நாம் உள்ளெடுக்கிறோம். சூடான பானத்தை பேப்பர் கப்பில் ஊற்றும் போது அதில் சிறிய அளவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து விடுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அது மட்டும் இல்லாமல் இந்த கப்களில் காணப்படும் உள் லைனிங்கானது நீரை வெளியேற்ற விடாமல் தடுக்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த பேப்பர் கப்பை மறுசுழற்சி செய்வது என்பது 100% சாத்தியமற்றது. 

இது குறித்த ஆராய்ச்சியில் 100 மில்லி பேப்பர் கப்கள் எடுக்கப்பட்டு அதில் சூடான நீர் ஊற்றப்பட்டது. இந்த நீர் பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கப்பட்டது. இதன் பிறகு அந்த சூடான நீர் ஒரு நுண்ணோக்கி மூலமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த சூடான நீரில் 25,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது மட்டுமன்றி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துத்தநாகம், ஈயம், குரோமியம் போன்ற உலோகங்களும் இருந்தன. அந்த நீரில் கண்டெடுக்கப்பட்ட துகள்கள் மைக்ரான் போல பெரியதாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேற்கு வங்காளத்தின் கராக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர்.சுதா கோயல் இது பற்றி பேசிய போது,”சராசரியாக ஒரு நபர் தினமும் மூன்று கப் டீ அல்லது காபியை  குடிக்கிறார். இதன் மூலம் அவர் 75,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்து உட்கொள்கிறார். மைக்ரோ பிளாஸ்டிக், பல்லேடியம், குரோமியம் மற்றும் காட்மியம் போன்ற உலோகங்களை அவருக்கு  தெரியாமலேயே தினமும் உட்கொள்ளும் போது காலப்போக்கில் மிகத் தீவிரமான உடல்நல சிக்கல்களுக்கு அந்த நபர் ஆளாகி  விடுகிறார். ” என்று கூறுகிறார். 

தொடர்ந்து பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, கல்லீரல் கோளாறு, அல்சர், குடல் புண், புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே முடிந்த வரை பேப்பர் கப்பை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். காசு கொடுத்து ஏன் வியாதியை வாங்க வேண்டும்… நல்லா இருக்க உடம்ப ஏன் கெடுத்துக்கணும். இனியாவது ஸ்மார்ட்டா இருங்க.!