கொரோனா தடுப்பூசி குறித்த கட்டுக்கதை எல்லாம் நம்பாதீங்க! முதலில் இதை படிங்க

7 June 2021, 8:41 am
covid vaccine myths in india
Quick Share

கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் வேளையில், மக்கள் பல அல்லல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை, தீவிர காய்ச்சல், சளி, இருமல் போன்ற  மிகவும் கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக இப்போது உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று காரணமாக பலர் இறந்தும் வருகின்றனர். இந்த கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு சிறந்த வழி கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான்.

ஒருபுறம் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்தாலும், மறுபுறம் தடுப்பூசி கிடைத்தும் போடலாமா வேண்டாமா என்ற எண்ணத்தில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். 

ஆரம்பத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது, அதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு கோவ்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.  அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-V தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஆனால் கொரோனா தடுப்பூசி குறித்த கட்டுக்கதைகள் வாட்ஸ்அப் போன்ற சமுக ஊடகங்களில் பரவுவதால் மக்கள் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். என்ன மாதிரியான கட்டுக்கதைகள் எல்லாம் இணையத்தில் பரவி வருகிறது, அதை ஏன் நம்பக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கட்டுக்கதை 1: தடுப்பூசி போட்டால் இரண்டு ஆண்டுகளில் மரணம்

ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அந்த வீடியோவில், கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று பிரெஞ்சு நச்சுயிரியல் வல்லுநர் மற்றும் நோபல் பரிசு பெற்ற லூக் மாண்டாக்னியர் கூறியதாக இருந்தது.

ஆனால் அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும்போது, ​​அது போலியான வீடியோ என்றும் அது யாரோ கிளப்பிவிட்ட பொய்யான தகவல் என்பதும் கண்டறியப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் நம்பத்தகுந்த தகவலின்படி, தடுப்பூசிகள் எப்போதும் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே இதுபோன்ற தவறான கருத்துக்களை நம்பி தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டாம்.

கட்டுக்கதை 2: தடுப்பூசி போட்டால் கொரோனா வரும்

தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கும் கொரோனா ஏற்படும் என்றும் கட்டுக்கதை பரவி வருகிறது. ஆனால் அது உண்மையே கிடையாது. ஏனென்றால், தடுப்பூசிகள் உண்மையில் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குகின்றன. எனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உடலில் உள்ள ஆன்டிபாடிகள் கிருமியை எதிர்த்துப் போராடி நோயாளி எளிதில் குணமடையவே உதவி செய்யும். நோய்த்தொற்றை உண்டாக்காது என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை 3: தவறான ஊசியை போட்டுவிடுவார்கள்

இந்தியாவில் மட்டும் சுமார் 73,000 தடுப்பூசி மையங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசிகளை வழங்க நிர்வாகமே பொறுப்பு. அதோடு பயிற்சி பெற்ற செவிலியர்களே தடுப்பூசி வழங்குவர். அதோடு சுகாதாரத் துறையும் கவனித்து வருகிறது. எனவே தடுப்பூசி குப்பியில் வேறு மருந்து இருப்பதற்கோ ஊசி மாற்றி போடுவதற்கோ வாய்ப்பு இல்லை.

கட்டுக்கதை 4: தடுப்பூசி எதிர்கால சந்ததிக்கு தீங்கு விளைவிக்கும்

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதால் எதிர்கால சந்ததிக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்பதெல்லாம் போலியான தகவல். இந்த கட்டுக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. இது மக்கள் மத்தியில் பரவிய வதந்தி மட்டுமே. இது போன்ற ஆதாரமற்ற கருத்துகளை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.

கட்டுக்கதை 5:  தடுப்பூசி போட்டுகொண்டால் உடல் பலவீனமாகிவிடும்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த பக்க விளைவுகள் நீண்ட காலம் நீடிக்காது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு காய்ச்சல், உடல் வலி மற்றும் ஊசி போட்ட இடத்தில் புண் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் அது நாளடைவில் குணமாகிவிடும். இது தவிர தடுப்பூசி வேறு எந்த கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தாது.

Views: - 231

0

0