இன்று முதல் கடுகு எண்ணெயுடன் வேறு எந்த சமையல் எண்ணெயையும் சேர்க்க கூடாது…. FSSAI புதிய தடை உத்தரவு!!!

By: Udayaraman
1 October 2020, 7:40 pm
Quick Share

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கடுகு எண்ணெயோடு வேறு எந்த விதமான சமையல் எண்ணெயையும் சேர்க்க கூடாது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (FSSAI) கூறியுள்ளது. மக்களுக்கு சுத்தமான கடுகு எண்ணெயை வழங்குவதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரை தான் இந்த திடீர் அறிவுறுத்தலுக்கு காரணம். 

இதன்படி FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சமையல் எண்ணெயுடன் கடுகு எண்ணெயை சேர்த்து உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படுகிறது. இனி மக்களுக்கு சுத்தமான கடுகு எண்ணெயை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். ” என்று கூறியது. 

பொதுவாக, இரண்டு வகையான சமையல் எண்ணெய்களை கலந்து தயாரிக்கும் போது, ஒரு எண்ணெயின் அளவானது இருபது சதவீதத்திற்கும் குறைவாக இருக்க கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது. ஆனால் தற்போது கடுகு எண்ணெயுடன் எந்த வித எண்ணெயையும் கலக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கலப்பட எண்ணெய் வியாபாரத்தை தடுக்கும் முயற்சியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான சமையல் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் கிடைக்கப்பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஒரு சில நிறுவனங்கள் கடுகு எண்ணெயோடு ஒரைசனாலை கலப்படம் செய்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில உணவுப் பாதுகாப்பு துறைக்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அரிசி தவிட்டு எண்ணெயில் ஒரைசனால் அதிக அளவில் உள்ள காரணத்தால் கடுகு எண்ணெயோடு இது கலக்கப்படுகிறது.

Views: - 68

0

0