தலையணை இல்லா தூக்கம் உடலில் இத்தனை மாற்றத்தை ஏற்படுத்துமா… இதுவல்லவா உண்மையான தலையணை மந்திரம்!!!

9 November 2020, 10:59 pm
Quick Share

நம் உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு நின்று விடுவது இல்லை. நாள் முழுவதும் வேலை செய்யும் நம் உடலுக்கு போதுமான அளவு தூக்கம் தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது ஆறில் இருந்து எட்டு மணி நேரம் தூக்கம் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

அப்படி நாம் தூங்கும் போது எந்த வாட்டத்தில் தூங்குகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு சில நேரங்களில் காலை எழுந்ததும் கழுத்து ஒரு சைடாக வலிக்கும். இதற்கு முந்தைய நாள் இரவு நீங்கள் தூங்கியதே காரணமாக இருக்கும். எனவே சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது அவசியம். மேலும் தலையணை இல்லையென்றால் ஒரு சிலருக்கு தூக்கமே வராது. 

ஆனால் உண்மையில் தலையணை வைத்து கொள்ளாமல் தூங்குவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்தால் ஆச்சரியப்பட்டு போய்விடுவீர்கள். தலையணை இல்லாமல் தூங்குபவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் ஒரு சிலர் தலைக்கு இரண்டு தலையணை, கால்களுக்கு இரண்டு என  வைத்து தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

தலையணை இல்லாமல் தூங்கும் போது தண்டுவடமானது அதன் இயல்பு நிலையிலேயே இருக்கும். இதன் விளைவாக உடல் வலி, தண்டுவடத்தில் பிரச்சினை என எந்த பிரச்சனையும் உங்களை தொந்தரவு செய்யாது. உயரமான தலையணையில் மட்டும் படுக்க கூடாது. இதனால் தண்டுவடம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. 

கழுத்து வலி, தோள்பட்டை வலியினால் அவதிப்படுபவர்கள் தலையணை இல்லாமல் தூங்குவது நல்ல பலன் தரும். மேலும் தலையணை இல்லாமல் தூங்குவது எலும்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவும். இது ஆரோக்கியம் மட்டும் இல்லாமல் அழகும் தரக்கூடியதாக அமைகிறது. தலையணை இல்லாமல் தூங்கும்போது முகச்சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். இதனால் என்றும் இளமையாகவே இருக்கலாம். 

ஒரு சிலருக்கு நேராக படுத்தால் தான் தூக்கம் வரும். இது போன்றவர்கள் மெல்லிய தலையணையை பயன்படுத்தலாம். இதனால் கழுத்து, தோள்பட்டை, தலைவலி போன்றவற்றில் இருந்து விலகி கொள்ளலாம். அதே போல குப்புறப்படுத்து உறங்குபவர்களுக்கு தட்டையான தலையணை சிறந்த ஒன்றாக அமையும். இதனால் சௌகரியமாக உணர்வதோடு முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படாது. 

ஆனால் இவை அனைத்தையும் காட்டிலும் தலையணை இல்லாமல் தூங்குவதே சிறந்தது. பல வகையான நோய்களில் இருந்து விலகி இருக்க இந்த எளிய தலையணை மந்திரத்தை நீங்கள் முயற்சிக்கலாம். இருப்பினும் ஒரு சிலருக்கு மருத்துவர்களே தலையணை வைத்து தூங்க பரிந்துரை செய்து இருப்பார்கள். அவர்கள் மருந்துவர்களின் ஆலோசனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

Views: - 50

0

0