முருங்கை கீரை : உடல் ஆரோக்கியத்தின் கலங்கரை

2 December 2019, 10:32 am
mi-updatenews360
Quick Share

வீட்டு வாசலில் முருங்கை மரம் இருப்பது இப்போது அடையாளம் போலாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலை கிடையாது. காரணம், பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் இருக்கும். வாசலில் இல்லாவிட்டாலும் கொல்லைப்புறத்தில் முருங்கை கண்டிப்பாக இருக்கும். செடி வளர்ப்பதே அரிதான நிலையில், முருங்கையை வளர்ப்பது கீழான விஷயமாகிவிட்டது. ஆனால், இதனால் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்க முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒருகாலத்தில் பருவமடைந்த பெண்களுக்கும், கர்ப்பப்பேறு இல்லாத பெண்களுக்கும் முருங்கைக்கீரையைச் சாப்பிடக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதிலுள்ள துத்தநாகம், இரும்புச் சத்துகள் பெண்களுக்கு வலுவூட்டும் என்பதே இதற்குக் காரணம். அது மட்டுமல்லாமல் ரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கும், ஹார்மோன் கோளாறுகளைக் குறைப்பதற்கும் முருங்கைக் கீரை அதிகளவில் பயன் தரும்.
இதனைச் சாப்பிட்டதாலேயே, மாதவிடாய் காலத்தில் அதிகப் பாதிப்பு இல்லாமல், பலவீனத்தை எதிர்கொள்ளாமல் இருந்தனர் அந்தக் காலத்து பெண்கள். இன்றோ, அதற்கு நேர்மாறான நிலையே உள்ளது. தைராய்டு குறைபாட்டினால் பெண்கள் அதிக உதிரப்போக்கையோ, மாதவிலக்குப் பிரச்சனைகளையோ எதிர்கொள்ளும்போது முருங்கைக்கீரை மட்டுமே அருமருந்தாக அமையும்.
மெனோபாஸ் பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சோர்வு, எரிச்சல், அசதி போன்றவற்றைத் தீர்க்கவும் முருங்கைக் கீரை உதவும். முருங்கைக் கீரையைப் பறிப்பது மட்டுமல்ல, அதனைச் சமைப்பதும் இன்று கடினமான ஒன்றாகிவிட்டது. இந்தச் சோம்பல்தான் பெண்களை மட்டுமல்லாமல் பெரியோர்கள், குழந்தைகள் என்று அனைவரையும் பாதிக்கிறது.
முருங்கை மரத்தின் கிளைகளை எளிதாக உடைத்துவிடலாம். அதனால், அதன் இலைகளைச் சமைத்து உண்டால் ஏற்படும் உடல் வலுவை எளிதில் குறைத்திட முடியாது. குழம்பு, கூட்டு, பொறியல், அடை தோசை உட்படப் பல்வேறு உணவு வகைகளில் முருங்கைக் கீரையைப் பயன்படுத்த முடியும்.
தலைமுடி கொட்டாமல் தவிர்ப்பதிலும், முடியின் வலுவை அதிகப்படுத்துவதிலும் முருங்கைக் கீரைக்கு ஈடுஇணை கிடையாது. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால், இன்றைய பெண்களில் பலரும் முருங்கைக்கீரையை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வர்.

1 thought on “முருங்கை கீரை : உடல் ஆரோக்கியத்தின் கலங்கரை

Comments are closed.