உலக தாய்ப்பால் வாரம் | தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் என்னென்ன உணவுகளை கட்டாயம் சாப்பிடணும்?

Author: Dhivagar
6 August 2021, 11:04 am
Essential foods for breastfeeding mothers
Quick Share

பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மற்ற எந்த உணவுகளாலும் கொடுக்க முடியாத ஆற்றலை இந்த இயற்கையான தாய்ப்பால் கொடுக்க வல்லது என்பதால், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில உணவுகளை தாய்மார்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது சேய்க்கு சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். சரி, நல்ல பால் வளத்துடன் இருக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பல தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தாய்மார்கள் சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். 

வாழைப்பழங்கள், மாம்பழங்கள், முலாம் பழம், ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற இயற்கையாக விளைந்த பழங்களைச் சாப்பிடலாம். இவை பொட்டாசியம் மற்றும் வைட்டமின் A ஆகியவற்றின் நல்ல ஆதாரங்களாக இருக்கும் சில பழங்கள் என்பதால் உங்களின் செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.

பழங்கள் தவிர காய்கறிகளும் தாய்மார்களுக்கு பால் சுரப்புக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் அவை மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும், காய்கறிகள் பால் உற்பத்திக்குத் தேவையான சில ஊட்டச்சத்துக்களுக்கான ஆதாரமாக இருக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் தாய்மார்கள் தினமும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை, கேரட், பூசணி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று USDA பரிந்துரைத்துள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் போது மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்று புரதச்சத்து. ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 கிராம் புரதத்தை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உலர் பருப்பு வகைகள், பழங்கள், கோழி இறைச்சி, முட்டை, பன்னீர், பருப்பு போன்ற உணவுகளை உடலுக்குத் தேவையான புரதச்சத்துக்களுக்கான சிறந்த ஆதாரங்களாகும். இதனுடன், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆதரவாக ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். சால்மன் மீன் மற்றும் மத்தி மீன் போன்ற ஒமேகா 3 அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் அதிகமாக மீன் உட்கொண்டால் உங்கள் குழந்தைக்கு  ஒத்துக்காமல் போகவும் வாய்ப்புண்டு என்பதால் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவை முதல் முறையாக அதிக அளவில் உட்கொள்ளும் போது குழந்தைக்கு ஏற்படும் அசௌகரிய அறிகுறிகளைக் கவனித்தால் அதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் பால் உற்பத்திக்கு உடலில் இருந்து கால்சியத்தை உறிஞ்சப்படும் மற்றும் வைட்டமின் D அளவு குறையவும் கூடும். எனவே தாய்க்கு பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சாப்பிடக் கொடுக்கலாம். பால் பொருட்கள் பிடிக்கவில்லை என்றால், பச்சை கீரை, காய்கறிகள் மற்றும் தானியங்களின் மூலம் அதற்கான தேவையைப் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இருப்பினும், வைட்டமின் D க்கு, சூரிய ஒளி முதன்மை ஆதாரமாக உள்ளது என்பதால் தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் வெயிலில் இருப்பது நல்லது.

Views: - 251

0

0