காலையில் ஒரு குட்டி வாக்! நீங்க நினைச்சுக்கூட பார்க்காத நல்லதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்

21 July 2021, 11:27 am
health benefits of a morning walk
Quick Share

தினமும் காலையில எழுந்து வாக்கிங் போறது கொஞ்சம் கஷ்டமா இருந்தா பழக பழக அதுவே உங்களுக்கு பழக்கம் ஆகிடும். ஆனால், காலையில எழுந்துக்கவே கஷ்டமா இருந்தா ரொம்ப கஷ்டம்னு தாங்க சொல்லணும். காலையில் எழுந்து சின்னதா ஒரு வாக்கிங் போயிட்டு வந்தா உங்களுக்கு நிறையவே நல்லதெல்லாம் நடக்கும். 

சரி, நீங்க காலையில எழுந்து நடக்குறதுனால என்னவெல்லாம் நன்மை உங்களுக்கு கிடைக்கும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கலாம்.

நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்கலாம்

ஒரு புதிய நாளை ஃப்ரெஷாக தொடங்க காலையில் எழுந்ததும் ஒரு குட்டி நடைபயிற்சி சென்றால் நல்லெல்லாம் நீங்கள் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். நடைபயிற்சியோடு உடற்பயிற்சி மேற்கொண்டால் உங்கள் உடலின் ஆற்றல் அளவு நன்கு அதிகரிக்கும். நாள் முழுக்க சோர்வே இல்லாமல் இருக்கலாம், மேலும் உங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.

எனவே காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

மன ஆரோக்கியம்

சிறந்த மனநிலை, மன அழுத்த குறைதல் மற்றும் பதட்டமின்மை எல்லாம் உங்களுக்கான தேவையாக இருந்தால் தினமும் காலையில் கட்டாயமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைபயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மைகளை வழங்கும். நடைபயிற்சி எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை வெளியிட உதவுகிறது. நடைபயிற்சி என்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை நிர்வகிக்கவும் தடுக்கவும் உதவும் இயற்கை வழி என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆழ்ந்த தூக்கம்

நாளெல்லாம் சுறுசுறுப்பாக இருப்பது மெலடோனின் (இயற்கை தூக்க ஹார்மோன்) விளைவுகளை அதிகரிக்கும், இது உங்களுக்கு எளிதாக தூக்கம் வர உதவும். காலை நடைப்பயிற்சி என்பது சூரிய உதயத்தைப் பார்ப்பதற்கோ அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கோ மட்டுமல்ல, பிரகாசமான காலை சூரிய ஒளியில் வெளியில் செல்லும்போது உங்கள் தூக்க சுழற்சி மேம்படும் என்பதால் ஆரோக்கியமான உறக்கம் இரவினில் கிடைக்க உதவியாக இருக்கும். இரவில் நன்கு தூங்கினாலே காலையில் சீக்கிரம் எழுந்துக்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் நாள் முழுவதும் அதிக விழிப்புணர்வுடனும் ஆற்றலுடனும் இருக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மூளை ஆரோக்கியம்

நடைபயிற்சி பல சிறந்த உடல்நல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால், தினமும் காலை நடைப்பயணம் மேற்கொள்வது உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நடைபயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல், கவனம் மற்றும் சிக்கல் தீர்க்கும் சிந்தனையாற்றல் ஆகியவற்றை வழங்கக்கூடியது.

நடைபயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வதால், அல்சைமர் நோய்க்கு எதிரான மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், காலப்போக்கில் நினைவக இழப்பின் விளைவுகளை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்

குறைந்த இரத்த அழுத்தம், மேம்பட்ட இரத்த ஓட்டம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்துக்கள் குறைய என அனைத்து வகையான இதயம் சம்பந்தமான நன்மைகளைப் பெற உங்கள் நாளைத் தினமும் நடைப்பயிற்சி உடன் தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்கள் இதய நோய் அபாயத்தை 35% குறைக்கும். 

வழக்கமான நடைப்பயணத்தை தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வோர், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் எல்லாம் இலலாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Views: - 102

0

0

Leave a Reply