சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க..

6 December 2019, 4:21 pm
health dry skin UpdateNews360
Quick Share

நவம்பர் முதல் பிப்ரவரி வரை நம்மூரில் குளிர் காலம் வாட்டி எடுத்துவிடும். மலைவாசஸ்தலம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாகவே இந்த பருவம் கம்பளிக்குள் முடங்க வைக்கும். நவம்பர், டிசம்பரில் காற்றழுத்தத்தின் காரணமாக மழை பெய்தாலும் கூட இந்த நிலை தான். இந்த குளிர் காரணமாகப் பல்வேறு நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் பாதிக்கின்றன. அதோடு சில தாக்கங்களும் வந்தடைகின்றன. அவற்றுள் ஒன்று, மனிதர்களின் சருமம் வறட்சி அடைவது.

மனிதர்களின் தோல் மற்றும் ரோமத்தில் இண்டக்ரல் லிப்பிட் லேயர் எனும் அடுக்கினால் உடலில் உள்ள நீர்ச் சத்து காக்கப்படுகிறது. குளிர் காலத்தில் இதில் பாதிப்பு ஏற்படுவதால் தோல் பரப்பு திட்டு திட்டாக மாறுகிறது. இதனால் வறண்டு போக்கும் நிலை ஏற்படுகிறது. எல்லா மனிதர்களையும் இப்பாதிப்பு வந்தடையும் என்றாலும் முதியவர்கள், சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களை இது அதிகமாக வாட்டுகிறது.

உடலில் ஈரப்பதம் குறைவதைத் தடுக்க, ‘ஜெல்’ கலந்த சோப், ஈரப்பதம் அளிக்கும் கிரீம் வகைகள் பூசுவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேபோல, இப்பருவத்தின் முடிவில் ரோமம் உதிர்வதும் அதிகரிக்கும். இதனால், ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறேன் பேர்வழி என்று இஷ்டத்திற்கு ஏதாவது ஷாம்பு, சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

சருமம் பளபளக்க, ஊற வைத்த பாதாம் பருப்பை அரைத்து அதனுடன் வெதுவெதுப்பான பால் கலந்து முகத்தில் பூசலாம். கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றினால், கொத்தமல்லியை அரைத்துச் சாறு பிழிந்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பூசினால் குணமாகும்.

குளித்த பின்னர் உடலில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க, குளிக்கும் நீரில் எலுமிச்சைச் சாறு 3 துளி பிழியலாம். இதனால் உடல் புத்துணர்வு அடையும். குளித்த பின்னர் உடலின் மீது வெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்தால் ஈரப்பதம் சீக்கிரம் மறையாது.

மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு குளிர் மற்றும் வெப்பத்தால் சருமத்தில் புள்ளிகள், சிவந்துபோதல் போன்றவை ஏற்படும். அதேபோல, நம்மூரில் இருப்பவர்களது சருமம் குளிர் காலத்தில் வெண்மையான படலம் படிந்தது போன்று காணப்படும் உடலில் தேங்காய் எண்ணெய் அலது நல்லெண்ணெய் பூசுபவர்களுக்கு இந்த பாதிப்பு வெளியில் தெரியாது.

அதேபோல, பனியின் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதும் வாயில் புண் ஏற்படுவதும் நிகழும். உதடுகளில் வெண்ணெய் தடவுவதால் அந்த பாதிப்பைச் சீராக்கலாம்.

குளிர் காலத்தில் பித்த வெடிப்புகள் அதிகமாவதைத் தடுக்க, இரவில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்க்கலாம். சந்தனம், மஞ்சள், மருதாணியை அரைத்துத் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். சிலர் கிளிசரின் பூசுவதையும் மேற்கொள்கின்றனர்.

நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் முடி உதிர்வைத் தடுக்க, நல்ல சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முட்டையில் அமினோ அமிலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கைக்குத்தல் அரிசி, கோதுமை, கேரட், பாதாம் வேர்க்கடலை, ஈஸ்ட், மீன், முட்டை, காலிப்ளவர் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் முடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

முடி பராமரிப்பில் கூடுதல் அக்கறை காட்டுபவர்கள் மிளகு எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து தேய்க்கலாம். சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டைத் தலையில் கட்டி, சுமார் 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசலாம். இதனால் முடியின் பளபளப்பு அதிகமாகும். தேவைப்பட்டால் சிகைக்காய் உடன் பச்சைப்பயறு மாவு, சாதம் வடித்த கஞ்சியைக் கலந்து தேய்த்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.

இவற்றை மேற்கொள்வதால் தோல் வறண்டுபோகாமல் தடுப்பதோடு தலை முடியும் பளபளப்பாக இருப்பதைக் காண முடியும்.