உங்களுக்கு வாந்தி வருவது போல வயிற்றை புரட்டும் உணர்வு இருந்தால் இப்படி பண்ணுங்க!

Author: Dhivagar
26 June 2021, 7:49 am
home remedies for vomiting sensation
Quick Share

குமட்டல் அல்லது வாந்தி எடுப்பது என்பது ஒரு நோய் அல்ல. ஆனால் யாருக்குமே இந்த உணர்வு பிடிக்காது. சேராத உணவு, ஒவ்வாமை, குடல் நோய்கள், கர்ப்பம், மருந்து மாத்திரைகள் போன்ற பல காரணிகளால் குமட்டல் உணர்வு ஏற்படக்கூடும். இந்த குமட்டல் உணர்வு இருந்தாலே சாப்பிடவே தோன்றாது. 

இது போன்ற குமட்டல் உணர்வு ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், நல்ல ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிட வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமன் செய்யும். 

அதே போல குமட்டல் உணர்வு இருக்கும் சமயத்தில் சில பொருட்களை சாப்பிட்டால் அந்த உணர்வு இல்லாமல் இருக்கும். அது என்னென்ன உணவு என்பதை பார்க்கலாம் வாங்க.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம். உடலில் இருந்து நச்சுகளை வேகமாக வெளியேற்றும் திறன் இதற்கு உண்டு. இது செரிமானத்திற்கு உதவுகிறது. இது குடல் இயக்கத்தை துரிதப்படுத்தும். இது குமட்டலில் இருந்து விடுபட உதவுகிறது.

ஆப்பிளை அரைத்து குடிக்க வேண்டாம். ஆப்பிளை நறுக்கி அப்படியே சாப்பிடுவது நல்லது.

இஞ்சி

குமட்டல் உணர்வை போக்க இஞ்சி ஒரு இயற்கை வைத்தியம் என்று சொல்லலாம். இஞ்சியில் ஜின்ஜெரால் மற்றும் ஷோகால் என்பவை உள்ளது. இது கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் பெண்களுக்கு அதிகம் குமட்டல் ஏற்படாமல் இருக்கவும் உதவியாக இருக்கும். இஞ்சி தேநீர் அல்லது இஞ்சி ஜூஸ் போட்டு உங்களுக்கு பிடித்தவாறு குடிக்கலாம்.

இளநீர்

குமட்டல் உணர்வு இருக்கும் சமயத்தில் இளநீர் தீர்வு தரும் ஒரு நல்ல பானம்.  இளநீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேரத்து குடித்தால் குமட்டல் உணர்வு இல்லாமல் நன்றாக இருக்கும். இளம் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அதில் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை அதிகரிக்கும் செரிமான பிரச்சினை இருந்தால் சட்டென்று குணமாகும்.

வாழைப்பழம்

குமட்டல் உணர்வு இருக்கும்போது பசித்தாலும் சாப்பிட முடியாது. அது போன்ற சமயத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் குமட்டல் உணர்வு நீங்கி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். இது ஆற்றல் நிறைந்த ஒரு பழம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமட்டல் உணர்வு ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

எண்ணெய் உணவுகள், பால், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, சோடா, கார உணவுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை அமிலத்தன்மையை ஏற்படுத்தும் உணவுகள் என்பதால் அவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிட்டு, அதிகமாக தண்ணீர் குடித்து வந்தாலே பெரும்பாலும் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. தொடர்ந்து உங்களுக்கு குமட்டல் உணர்வு இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

Views: - 877

1

0