ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாட்டைக் குணப்படுத்துவது எப்படி?

Author: Dhivagar
29 July 2021, 6:00 pm
how to cure erectile dysfunction naturally and permanently
Quick Share

விறைப்புத்தன்மை குறைபாடு என்பது உலகெங்கிலும் பல லட்ச கணக்கான ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சினையாகும். உங்களுக்கு இந்த பிரச்சினை இருந்தால், உங்கள் ஆண்குறி விறைப்புத்தன்மையை அடைய மிகவும் கஷ்டப்படுவதை நீங்கள் உணர்வீர்கள். இது ஆண்மைக் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. 

மன அழுத்தம் காரணமாக இந்த விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற பாலியல் ரீதியான பிரச்சினைகளும் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கிறதென்றால், அது ஏதேனும் தீவிர பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்கலாம். 

சில நேரங்களில், உறவு பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படக்கூடும். ஆண்குறிக்கு சீராக இரத்தம் பாயும் போது உங்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சினை ஏதும் ஏற்படாது. ஆனால் விறைப்புத்தன்மை குறைபாடு உங்களுக்கு நாட்பட்ட பிரச்சினையாக மாறினால், அது இருதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் நீங்கள் தீவிரமான சிக்கலை சந்திக்க நேரிடும்.

குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு அல்லது பிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சிறுநீரக நோய் மற்றும் வயதுக்கு மீறிய முதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உடல் பருமனாகும், நீரிழிவு நோய், பார்க்கின்சன் நோய் போன்றவற்றின் காரணமாகவும் இந்த விறைப்புத்தன்மைக் குறைபாடு ஏற்படக்கூடும். ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும், அதற்கு நீங்கள் சரியான தக்க நேரத்தில் சரியான சிகிச்சை பெற வேண்டும். ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையும் மருத்துவ உதவியும் பெறுவது அவசியம். அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் மிகவும் முக்கியம்.

நீண்ட நேரம் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், நம்மில் இருக்கும் மன அழுத்தம் மற்றும் தினசரி வேலைகள் காரணமாக பாலியல் ஆசைகளும் ஆற்றலும் நாம் நினைக்கும் அளவுக்கு இல்லாமல் போகலாம். இதனால் ஏற்படும் திருப்தியின்மையினாலும் மன அழுத்தத்தாலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் அவற்றில் ஒன்று தான் விறைப்புத்தன்மை குறைபாடு.

பல ஆய்வுகள் சத்தான கடல் உணவுகளை உட்கொண்டால் பாலியல் செயல்திறன் அதிகரிப்பதற்கும் விறைப்புத்தன்மை குறைபாட்டையும் போக்க உதவியாக இருக்கும் என்று நிரூபணம் செய்துள்ளன. இந்த உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, ஆற்றல் அளவை மேம்படுத்துகின்றன, L-அர்ஜினைன் போன்றவற்றை அதிகரிக்கின்றன மற்றும் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற சமநிலையை அதிகரிக்கின்றன. 

ஆனால் எல்லோருமே இந்த உணவுக்கு முழுமையாக மாறிவிட முடியாது. அதற்கு பதிலாக நம்ம ஊர்களில் கிடைக்கும் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமே இந்த விறைப்புத்தன்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பொட்டாசியம் சத்து நிறைந்த தர்பூசணிகள், பப்பாளி மற்றும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டம் சீராக செறிவூட்டப்பட்ட தமனிகளை நீர்த்துப்போகச் செய்து உதவுகின்றன. இது மேம்பட்ட விறைப்புத்தன்மைக்கு உதவுகிறது.

கம்பங்கஞ்சி, அரிசி கஞ்சி, சோளக் கஞ்சி போன்ற கஞ்சி வகைகளை சாப்பிடலாம். சுவையாக இல்லை என்றாலும் இந்த இயற்கை உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து உங்கள் இரத்த நாளங்கள் சீராக செயல்பட உதவுகிறது.

சால்மனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளது. இதை உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இரத்த ஓட்டத்தை சீராக கடத்துகிறது. அதே போல கெளுத்தி மற்றும் டுனா போன்ற மீன்களையும் சாப்பிடலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது அவற்றை சாப்பிடுவது உங்கள் விறைப்புத்தன்மைக் குறைப்பாட்டைப் போக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.

வெங்காயம் மற்றும் பூண்டில் அல்லிசின் உள்ளது, இது இரத்த ஓட்டத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவுகிறது. அதிகரித்த இரத்த ஓட்டம் சிறந்த மற்றும் மேம்பட்ட விறைப்புத்தன்மைக்கு உதவுகிறது.

நீண்டநேர வலுவான விறைப்புத்தன்மைக்கு ஏற்ற மற்றொரு சிறந்த உணவு டார்க் சாக்லேட். டார்க் சாக்லேட்டுகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உங்கள் பாலியல் திறனை மேம்படுத்தவும் உதவும்.

பாதாம், வாதுமைக்கொட்டை, பேரீச்சம் பழம், முந்திரி திராட்சை போன்ற உளர் உணவுகளில் துத்தநாகம் உள்ளது. இது ஆண் பாலியல் ஹார்மோன் ஆன டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு ஏற்றது. நீண்ட நேர மற்றும் வலுவான விறைப்புத்தன்மைக்கு டெஸ்டோஸ்டிரோன் தேவைப்படுகிறது. எனவே, இந்த உணவுகளை தினமும் அளவோடு சாப்பிடலாம்.

Views: - 516

2

0