காஷ்மீர் ஸ்பெஷல்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காவா தேநீர்!!!

6 March 2021, 3:53 pm
Quick Share

தேநீர் என்பது நம் நாட்டில் பல விதமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.  நீங்கள் சோகமாக இருந்தால், தேநீர் அருந்துங்கள்; நீங்கள் அழுத்தமாக இருந்தால், தேநீர் அருந்துங்கள்; உங்களுக்கு சளி  இருந்தால், தேநீர் அருந்துங்கள்! இவ்வாறு தேநீரின் நன்மைகள் ஏராளம். காவா (Kahwa) என்று அழைக்கப்படும் காஷ்மீர் தேநீர் ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்துடன் கூடிய தேநீர். அதோடு இது ஒரு சத்தான பானமாகும். இது தீவிர வானிலை நிலையில் உடலை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இது இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, திராட்சை, அக்ரூட் பருப்புகள், முந்திரி மற்றும் பேரிச்சம் பழங்கள் போன்ற உலர்ந்த பழங்களால் தயாரிக்கப்படுகிறது.

இது பாரம்பரியமாக சமோவர் (samovar) எனப்படும் கெட்டிலில் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரில் உள்ள பல்வேறு மசாலாப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டமைக்கவும் பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த தேநீர் செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையை குறைக்க  முயற்சிப்பவர்களுக்கு ஏற்றது. இதில்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் பதட்டத்தை குறைக்கவும் இது உதவுகிறது. சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதற்கும் இது சிறந்தது. இதில் பாதாம் போன்ற பொருட்கள் இருப்பதால், சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான தேநீரை வீட்டிலேயே செய்ய சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

படி 1

கஹ்வா தேநீர் தயாரிக்க, 2 ஏலக்காய், 2 கிராம்பு மற்றும் ½ அங்குல இலவங்கப்பட்டை குச்சியை எடுத்து ஒரு உரலில் நன்றாக நசுக்கி எடுக்கவும்.

படி 2

தோராயமாக 4 -5 பாதாம் பருப்பை ஒரு சில அக்ரூட் பருப்புகளுடன் சேர்த்து நறுக்கி, அவற்றையும் உரலில் போட்டு நசுக்கவும்.

படி 3

ஒரு கெட்டிலில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நாம் நசுக்கி வைத்துள்ள  இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, பாதாம் மற்றும் அக்ரூட் பருப்பை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

படி 4

ஒரு தேக்கரண்டி காஷ்மீரி கிரீன் டீ இலைகள் மற்றும் சில உலர்ந்த ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்க்கவும். இதனை 3 நிமிடங்கள் அப்படியே விடவும்.

படி 5

தேநீரை வடிகட்டி, உங்களுக்கு பிடித்தமான டம்ளருக்குள் ஊற்றவும். சில பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும். இந்த தேநீரில் நாம் சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை. நீங்கள் இனிப்பு சுவையை  விரும்பினால் அதில் சிறிது சர்க்கரை சேர்க்கலாம். இந்த தேநீரை  சூடாக பரிமாறவும்.

Views: - 1

0

0