வெளிநாட்டுக்கே போனாலும் நம்ம ஊரோட கொத்தமல்லி கறிவேப்பிலை தொக்கு ருசி மறக்கமுடியாது! எப்படி செய்யனும் தெரியுமா?

Author: Dhivagar
4 August 2021, 5:46 pm
Kothamalli Karuveppilai Thokku
Quick Share

தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் ‘தொக்கு’ மிகவும் பிரபலம். பல வகையான தொக்கு உண்டு. இந்த தொக்கு என்பது சட்னி கிடையாது. இது சற்று வித்தியாசமானது. அது இந்த கொத்தமல்லி கறிவேப்பிலை தொக்கின் ருசியெல்லாம் அடித்துக்கொள்ளவே முடியாது. 

சுடச் சுட இருக்கும் வெள்ளை சாதத்தில், லேசாக நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி, இந்த கொத்தமல்லி கறிவேப்பிலைத் தொக்கைச் சேர்த்து பிணைந்து கம கமவென மனம் வரும்போது , அந்த மனத்தை அப்படியே நாசியில் உள்ளிழுத்துக்கொண்டு, ஒருவாய் அள்ளிச் சாப்பிட்டால் அடடா… 

“சொர்க்கமே என்றாலும் அது இந்த தொக்கைப் போல வருமா”னு நீங்களே பாட ஆரம்பிச்சுடுவீங்க.   

இந்த தொக்கு எல்லாம் பொதுவாக 2-3 வாரங்கள் வரை நன்றாக இருக்கும். இந்த வகையான தொக்குகளைத் தயார் செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டால் வேண்டுமெனும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். மதிய உணவு அல்லது பயணத்தின் போது இந்த தொக்கு இருந்துவிட்டால் சாதத்துக்கு குழம்பே தேவையில்லை.

ருசி மட்டுமில்லாமல் இந்த கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது மற்றும் அதை தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் கருகருவென தலைமுடி கிடைக்கும். கொத்தமல்லி இலைகளும் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே பல உணவுகளில் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் கறிவேப்பிலையும் அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

சரி இப்போது கறிவேப்பிலை கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வதென்று கற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

 • கறிவேப்பிலை- 1 கொத்து
 • கொத்தமல்லி இலைகள் – 1 கொத்து
 • உளுந்தம் பருப்பு- 2 முதல் 3 தேக்கரண்டி
 • மிளகு – 1 தேக்கரண்டி
 • கொத்தமல்லி விதைகள்- 1/2 தேக்கரண்டி
 • சீரகம்- 1 தேக்கரண்டி
 • புளி- ஒரு நெல்லிக்காய் அளவு
 • பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
 • வெந்தய விதைகள் – 1/4 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
 • வர மிளகாய் – 5 முதல் 6 எண்கள்
 • உப்பு – தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு:

 • நல்லெண்ணெய் – 50 மிலி 
 • கடுகு – 1 தேக்கரண்டி
 • கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
 • உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை

 • ஒரு சூடான பாத்திரத்தில், நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கிக்கொள்ளுங்கள். உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும். பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறவும். தீய்ந்து கருப்பு நிறமாகி விடக்கூடாது
 • சீரகம், கொத்தமல்லி விதைகள், வெந்தய விதைகள், பெருங்காயம், வர மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள்.
 • புளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
 • நன்கு வறுத்த பிறகு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். நன்கு கிளறவும். ரொம்ப வறண்டு இருந்தால், தேவைப்பட்டால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 • இப்போது உப்பு சேர்த்து எல்லாவற்றையும் வதக்கவும்.
 • இலைகள் மற்றும் பிற பொருட்கள் நன்றாக வதங்கியவுடன் அடுப்பை அணைக்கவும். அதை குளிர்விக்கவும்.
 • இப்போது அதை மிக்ஸியில் அரைக்கவும். தேவைப்பட்டால் உப்பு அல்லது வர மிளகாய் தூள் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றிவிடக்கூடாது.
 • இப்போது தாளிக்கலாம். ஒரு சூடான கடாயில், நல்லெண்ணெயைச் சேர்த்து, அதை சூடாக்கவும்.
 • இப்போது கடலைப் பருப்பு, கடுகு மற்றும் உளுந்தம் பருப்பைச் சேர்த்து, வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறவும். இப்போது அரைத்த விழுதைச் சேர்த்து கலக்கவும்.
 • தொக்கின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து அடர் பச்சை நிறமாக மாறும் வரை தாளிக்க வேண்டும். இந்த பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.

அவ்வளவுதாங்க! இப்போது இந்த கொத்தமல்லி கறிவேப்பிலை தொக்கை சாதத்துடன் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சுட சுட சாப்பிடலாம்.

Views: - 370

1

0