நீங்க ஆஃபிஸ்ல வேலைச் செய்யும்போது தலைவலி ஏற்படுதா? அதுக்கு என்ன காரணம்? மாத்திரையில்லாம வேற என்ன தீர்வு?

Author: Dhivagar
9 August 2021, 11:13 am
Remedies to Get Rid of Headaches Naturally
Quick Share

டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி மிகவும் பொதுவான ஒரு வகை தலைவலி. பலருக்கும் இந்த தலைவலி ஏற்படக்கூடும். இந்த தலைவலி ஏற்படும்போது உங்கள் கண்கள் மற்றும் உங்கள் தலை மற்றும் கழுத்தில் லேசான, மிதமான அல்லது கடுமையான வலி ஏற்படக்கூடும். சிலருக்கு நெற்றியைச் சுற்றி இறுக்கமான பாரமான உணர்வு ஏற்படக்கூடும்.

இது போன்ற வேலையிடங்களில், வேலையின் காரணமாகவோ வேறு சில காரணங்களாலோ தலைவலி ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்த வேண்டும், அதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது நாட்பட்ட பிரச்சினையாக மாறக்கூடும்.  

ஒற்றை தலைவலி, இரண்டு பக்க தலைவலி என எதுவாகினும் அதை அவ்வப்போது சரிசெய்து கொள்வது மிகவும் அவசியமானது. ஆனால், தலைவலி என்றாலே உடனே மாத்திரை என்று போகக்கூடாது. முடிந்தவரை இயற்கை முறைகளைப் பின்பற்றுவதையே முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சரி, இயற்கை முறை என்றால் என்ன செய்யலாம்? எதனால் இந்த தலைவலி ஏற்படுகிறது? விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்:

 • உணவு வழக்கங்கள் 
 • செயல்பாடு குறைபாடு 
 • குளிர்ந்த வெப்பநிலை
 • டிஜிட்டல் திரைகளையே பார்த்துக்கொண்டிருத்தல்
 • மது அருந்துதல்
 • கண்களில் ஏற்படும் அழுத்தம் 
 • கண் வறட்சி 
 • புகைப்பிடித்தல்
 • சளி மற்றும் காய்ச்சல்
 • தூக்கமின்மை 
 • உணவுகளைத் தவிர்த்தல் 
 • தண்ணீர் பற்றாக்குறை

ஆகிய பல காரணங்களால் தலைவலி ஏற்படக்கூடும்.

சரி, இப்போது மேற்சொன்ன காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு இயற்கையான தீர்வுகளைப் பார்க்கலாம்.

 1. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் தலைவலி ஏற்படக்கூடும். எனவே முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 
 2. உடலை நீரேற்றமாக வைத்திருந்தாலே உங்களுக்கு தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் எல்லாம் ஏற்படாது. நீர்ச் சத்துள்ள உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 3. இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், நரம்பு மண்டலம் சீராக செயல்படவும் மெக்னீசியம் மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. எனவே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 4. மது அருந்துவதை குறைத்துவிட வேண்டும். இல்லையென்றால், தவிர்த்து விட வேண்டும். மது சிறுநீர் பெருக்கும் தன்மைக் கொண்டதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு உந்துதலை ஏற்படுத்தும் என்பதால், உடலுக்கு தேவையான சத்துக்களும் சிறுநீர் வழியே வெளியேறக்கூடும். இதற்கான தொடர் தலைவலி ஏற்படக்கூடும். 
 5. போதுமான உறக்கம் இல்லையென்றாலும் பல விதமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது மிகவும் அவசியம்.
 6. ஹிஸ்டமைன் எனும் ரசாயனம் இயற்கையாகவே உடலினுள் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்படுகளுக்கு உதவ உற்பத்தி செய்யப்படுகிறது. இதை அதிகமாக வெளிப்புற உணவுகளின் மூலம் எடுத்துக்கொண்டால் தலைவலி ஏற்படக்கூடும்.  பீர், ஒயின், சீஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
 7. சத்துள்ள ஆரோக்கியமான எண்ணெய்களை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், போன்ற எண்ணெய்கள் உங்கள் உடல் சூட்டைக் குறைக்கும் என்பதால அவற்றை உணவுகளில் சேர்த்துக்கொள்வது நல்லது.
 8. யோகா பயிற்சிகளை தவறாமல் செய்வதன் மூலம் உங்கள் அழுத்தம் குறைந்து, உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், உடலில் உள்ள வலிகள் குறைந்தது வாழ்க்கைத் தரம் மேம்படும்.
 9. அறைகளின் வாசனைக்கு பயன்படுத்தும் ரூம் ஸ்பிரேக்கள், ரூம் ஃபிரெஷ்னர்ஸ் ஆகியவற்றை அளவாக பயன்படுத்த வேண்டும். உடலின் வாசனைக்கு பயன்படுத்தும் பெர்ஃபியூம்ஸ், சிகரெட் வாசனை போன்ற அதிக நாற்றம் நிறைந்தவற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.
 10. இஞ்சி டீ, சுக்கு பால், கொத்தமல்லி காபி, போன்ற மூலிகை பானங்களை எடுத்துக்கொண்டால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சினைகளில் இருந்து எல்லாம் தீர்வு கிடைக்கும்.

Views: - 232

1

0