தலப்பாக்கட்டி ஸ்டைல் நாட்டுக்கோழி பிரியாணி நம்ம வீட்டிலேயே எப்படி செய்யனும்னு கத்துக்கலாமா? | Thalapakkatti Naatu Kozhi Briyani

Author: Dhivagar
25 August 2021, 5:56 pm
Thalappakatti Style Chicken Biriyani
Quick Share

அசைவ பிரியர்கள் யாருக்கும் பிரியாணி பிடிக்காமல் இருக்கவே இருக்காது. அதுவும் தலப்பாக்கட்டி பிரியாணி என்றால் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். ஆனால், சென்னை, கோவை போன்ற நகர்களில் இருக்கும் தலப்பக்கட்டி பிரியாணி கடைகளில் சென்று விலையைக் கேட்டாலே தலைச் சுற்றி விடும். ஆனால், நீங்கள் இதை வீட்டிலேயே செய்தால் உங்களுக்கு வேண்டுமளவுக்கு வயிறார சாப்பிடலாம். சரி, தலப்பாக்கட்டி ஸ்டைலில் உங்கள் வீட்டிலேயே பிரியாணி எப்படி செய்ய வேண்டும் என்பதை படிப்படியாக பார்க்கலாம்.

தலப்பாக்கட்டி நாட்டு கோழி பிரியாணி செய்முறை

தேவையான பொருட்கள்

 • சீரக சம்பா அரிசி – 1 கிலோ
 • நாட்டு கோழி இறைச்சி – 1/2 கிலோ
 • சின்ன வெங்காயம் – 2 கப் (சுமார் 200 கிராம்)
 • தக்காளி – 1 (நறுக்கியது)
 • பூண்டு – 15 கிராம்பு
 • இஞ்சி – 2″ துண்டு
 • பச்சை மிளகாய் – 4
 • புதினா இலைகள் – 1/2 கப்
 • கொத்தமல்லி இலைகள் – 1/2 கப் (நறுக்கியது)
 • தயிர் – 1/4 கப்
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
 • உப்பு – ருசிக்கு ஏற்ப 
 • எண்ணெய் – 1/4 கப்
 • நெய் – 3 டீஸ்பூன்
 • தண்ணீர் – 3 கப்
 • எலுமிச்சம்பழம் – 1/2

மசாலா பொடி தயார் செய்ய:

 • பிரியாணி இலை – 1
 • சோம்பு – 1 தேக்கரண்டி
 • சீரகம் விதைகள் – 1/2 தேக்கரண்டி
 • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
 • இலவங்கப்பட்டை – 1 “துண்டு
 • கிராம்பு – 3
 • ஏலக்காய் – 3
 • அன்னாசி மொக்கு – 1
 • ஜாதிபத்திரி – 1
 • வர மிளகாய் – 4
 • கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

தயாரிப்பு முன்னேற்பாடு 

 • நாட்டுக்கோழி இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி நன்கு கழுவிக்கொள்ளுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து ஊற வைக்கவும். இதை அரை மணி நேரம் அப்படியே ஊறட்டும்.
 • சீராக சம்பா அரிசியை போதுமான நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்து. கழுவி தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விடவும்.
 • மசாலா பொடிக்கு தேவையென்று குறிப்பிட்டுள்ள பொருட்களை சரியான அளவில் சேர்த்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா இலைகள், கொத்தமல்லி இலைகளை கழுவி நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

தலப்பாக்கட்டி பிரியாணி தயார் செய்யலாமா?

 • பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கி, ஒரு பிரியாணி இலையைச் சேர்த்து பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
 • தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • அடுத்து புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
 • ஊறவைத்த கோழிக்கறியைச் சேர்த்து, ஒன்றாகக் கலக்கவும்.
 • இப்போது புதிதாக தயார் செய்யப்பட்ட மசாலா பொடியைச் சேர்க்கவும். இதனுடன் தயிரையும் சேர்க்கவும்.
 • எல்லாவற்றையும் ஒன்றாக 5 நிமிடங்கள் கலந்து வேகவிடவும்.
 • அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். சீராக சம்பா அரிசிக்கு நமக்கு 1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் தேவை. நாம் 2 கப் அரிசியைப் பயன்படுத்தியதால், 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அது ஒரு கொதி நிலைக்கு வரட்டும். எப்போதும் சாதம் வைக்கும் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
 • இப்போது ஊறவைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். நன்கு கொதித்த பிறகு, குக்கரை மூடி வைத்து வைத்து மிதமான தீயில் வேக விடவும்.
 • ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்துவிடவும். அடுப்பை அனைத்து ஒரு 15 நிமிடங்களுக்கு குக்கரைத் திறக்க வேண்டாம்.
 • 15 நிமிடங்களுக்கு பிறகு மேலோட்டமாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கறி உடையாமல் கிளறவும். 
 • அவ்வளவுதான் சூடான சுவையான தலப்பாக்கட்டி நாட்டுக்கோழி பிரியாணி தயார் ஆகிவிட்டது.
 • சில்லென்று தயிரில் வெங்காயம், கேரட், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து ரைத்தாவாக பிரியாணி உடன் பரிமாறுங்கள்.

Views: - 546

1

0