உடல் மெலிந்து போய் சதைப்பிடிப்பே இல்லாமல் இருக்கவங்களுக்கு கிடைத்த ஒரு வரம் இந்த துளசி வாசனை சீரக சம்பா! முழுசா தெரிஞ்சிக்க படிங்க
Author: Hemalatha Ramkumar19 August 2021, 10:42 am
பழைமை என்றுமே அற்புதமானது. அப்படி பழைமையின் அருமையையும், பாரம்பரியத்தின் நன்மையையும் அறிந்த இளம் தலைமுறை நலவாழ்வை நோக்கி அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் நம் முன்னோர்கள் எல்லாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததும், வாழ்வதும் தான். அவர்களின் ஆரோக்கியத்திற்கான இரகசியம் என்ன என்று ஆராய்ந்த போது அதில் அவர்கள் சாப்பிட்டு வந்த உணவு வகைகளும் ஒரு காரணமாக இருந்துள்ளன. இதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்கள் உண்டு வந்த பாரம்பரிய அரிசி. ஆகவே தினமும் ஒரு பாரம்பரிய அரிசியைப் பற்றிய தகவல்களை பார்த்து வருகிறோம்.
பாரம்பரிய நெல் வகைகளில் இன்று நாம் காண இருப்பது துளசி வாசனை சீரகச் சம்பா அரிசி. பல வகையான சீரகச் சம்பா அரிசியில் மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒன்று தான் வாசனை சீரகச் சம்பா. கிட்டத்தட்ட வாசனை சீரகச் சம்பா அரிசியைப் போலவே நன்மைகள் கொண்டது துளசி வாசனை சீரகச் சம்பா. இந்த அரிசி வாசனை சீரகச் சம்பாவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும்.
அதன் நெற்பயிரே ஒரு பெரிய கடுகு அளவில் தான் இருக்கும். பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த அரிசியில் கருந்துளசியில் இருப்பதைப் போலவே ஒரு கருப்பு கோடு இருக்கும். மேலும் இது நல்ல வாசனையாகவும், அதிக சுவை கொண்டதாகவும் இருக்கும். இது நூற்றி இருபது நாட்கள் வயது கொண்ட ஒரு நெற்பயிராகும்.
இந்த துளசி வாசனை சீரகச் சம்பா அரிசி நன்றாக விளைந்து பூக்கும் தருணத்தில் நாம் வயலுக்கு சென்று பார்க்கும் போது வயலில் ஒரு அற்புதமான வாசனை வீசுமாம். இது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஒரு வகை அரிசியாகும். இதனை சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த துளசி வாசனை சீரகச் சம்பா அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல புஷ்டியாக இருக்கும்.
ஒரு ஏக்கருக்கு இருபத்தி நான்கில் இருந்து முப்பது மூட்டை வரை இயற்கையான முறையில் கிடைக்கும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. அதே போல இது நல்ல மகசூலை கொடுக்கக்கூடிய ஒரு நெல் இரகம். காட்டுயானம் நெற்பயிரைப் போலவே நன்கு உயரமாக வளரும். இரைப்பை கோளாறுகளை சரி செய்யும் தன்மை துளசி வாசனை சீரகச் சம்பா அரிசிக்கு இருக்கிறது.
அதே போல வாத நோயின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நல்ல நறுமணம் வீசும், சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்த அரிசியை நிச்சயமாக நீங்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டும்.
2
0