டெல்டா பிளஸ் கொரோனாவின் அறிகுறிகள் என்ன? முன் எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி?

Author: Dhivagar
28 June 2021, 8:20 pm
what are the symptoms and precautions of delta plus covid-19
Quick Share

கொரோனா வைரஸ் அதன் தன்மையை மாற்றிக் கொண்டே இருப்பதால் உலக நாடுகளுக்கு இதை சமாளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. கொரோனா வைரஸ் அதன் மரபணு வரிசையில் புதிய திரிபை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனாவிடம் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், இது பரவும் வேகமும் அதன் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. கடந்த 2019 ஆண்டு முதல் பரவ தொடங்கிய இந்த கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் சில நாடுகளில் மூன்றாம் அலை என உலக மக்களை படாத பாடுபடுத்திவிட்டது. இந்த பதிவில் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பற்றியும் இதனிடம் இருந்து எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று B.1.617.2 என்பதாகும். இதில் மிகவும் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இந்த மரபணு திரிபு ஏற்பட்ட கொரோனா முதலில் தோன்றியது இந்தியாவில் தான். இந்தியாவில் இருந்து இப்போது உலக நாடுகளுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இதைத் தடுக்க, அரசாங்கம் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.

இரண்டாவது அலையே இன்னும் முழுசாக முடியாத நிலையில் மூன்றாவது அலையும் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெல்டா மாறுபாட்டால் பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாதாரண கொரோனா வைரஸை விட இந்த டெல்டா மாறுபாடு உடல் வழியாக 60% வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. எனவே அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது.

டெல்டா பிளஸ் கொரோனா தொற்றின் அறிகுறிகள்

 • வறட்டு இருமல், 
 • சோர்வு 
 • காய்ச்சல், 
 • மூச்சுத் திணறல் 
 • வயிற்று வலி 
 • சருமத்தில் அரிப்பு 
 • கால்விரல்களின் நிறமாற்றம் 
 • தொண்டை புண் 
 • வாசனை இழப்பு 
 • வயிற்றுப்போக்கு 
 • தலைவலி 
 • மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் எல்லாம் ஏற்பட வாய்ப்புண்டு.

டெல்டா பிளஸ் பெருக்கத்திற்கான காரணம்

கொரோனா வைரஸ் எப்படி தொற்று நோயாக பரவியதோ அதே போல் தான் இந்த டெல்டா பிளஸ் கொரோனா தொற்றும். பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது, பாதிக்கப்பட்ட நபரின்  இருமல் மற்றும் தும்மல் போன்ற செயல்பாடுகளின் போது நீர்த்துளிகள் மூலம் வைரஸ் காற்று வழியாக மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும். டெல்டா பிளஸ் மாறுபாடு காற்றில் வேகமாக பரவி எளிதில் தாக்கக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது.

இதேபோல், வீட்டை விட்டு வெளியேறி கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வது, பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களைத் தொடுவது போன்ற செயல்பாடுகள் உங்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது. வெளியே செல்லும் போது முககவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி போட்டுக்கொள்வது கொரோனாவுக்கு எதிராக உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

டெல்டா பிளஸ் கொரோனா முன்னெச்சரிக்கை

இந்த சமயத்தில் SMS எனும் முன்னெச்சரிக்கையுடன் நான் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். 

அதென்ன SMS?

S – Social Distance எனும் சமூக இடைவெளி 

என்னதான் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாம் வெளியிலோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும்போது முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை நேரடி தொடர்பைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 

M – Mask எனும் முககவசம்

நம் அஜாக்கிரதையினால் தான் நம் முகம் முககவசத்தினுள் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போதாவது நாம் அதை சரி செய்துகொண்டால் தான் நம் வருங்காலமாவது இயல்பு நிலைக்குத் திரும்பும். முடிந்தவரை, மாற்றவுடன் நெருங்கிய தொடர்பில் செல்லும்போது, AC அறைகளில் இருக்கும்போது, பொது வெளியில் கடைகளுக்கு செல்லும்போது முககவசம் அணிந்தே இருப்போம்.

S – Sanitation & Sanitization எனும் சுகாதாரம் & சுத்திகரிப்பு

நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கோ மற்றவரிடம் இருந்து நமக்கோ கொரோனா தொற்று பரவுவதற்கான முதன்மை காரணம் சுகாதாரமின்மை தான். நாம் வெளியில் செல்லும்போதோ, வெளியில்   சென்று வீட்டிற்கு வரும்போதோ இயற்கை சுத்திகரிப்பான்களான மஞ்சள், வேம்பு போன்றவற்றுடனோ அல்லது கடைகளில் கிடைக்கும் சோப்பு, சேனிடைசர் போன்றவற்றுடனோ கை, கால், முகம், ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதோடு முட்டை, சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நலமுடன் இருந்தாலே நாம் கொரோனாவின் மூன்றாவது அலை எழாமல் தடுக்கவும் முடியும், தற்காத்துக்கொள்ளவும் முடியும்.

Views: - 600

0

0