புரோனிங் (Proning) என்றால் என்ன? COVID-19 நோயாளிகள் எளிதில் சுவாசிக்க இது உதவுமா?

4 June 2021, 11:26 am
What Is Proning How It Help COVID-19 Patients Breathe Easy
Quick Share

COVID-19 இரண்டாவது அலையில் இந்தியாவே படாதபாடுபட்டு வருகிறது. எதிர்பாராத வகையில் பல்லாயிர கணக்கான மக்களுக்கு தொற்று ஏற்படுவதால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் பல அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது போன்று ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியாக ‘புரோனிங்’ (proning) எனும் நுட்பம் பரிந்துரைக்கப்படுகிறது.

COVID -19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு சுவாசம் ஒரு பெரிய சவாலாக இருக்கும் நேரத்தில், இந்த புரோனிங் முறை என்பது உதவியாக இருப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது மருத்துவமனைகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் Covid 19 positive என சோதனை முடிவுகள் வந்த பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையில் உள்ள உள்ளவர்களும் கடைப்பிடிக்க வேண்டும். ஆக்ஸிஜன் செறிவு 92 க்குக் கீழே இருப்பதாக கண்டறிந்தால், வழக்கமான புரோனிங் செய்வது நுரையீரலுக்கு மேம்பட்ட காற்றோட்டத்தை உறுதி செய்யும்.

புரோனிங் செய்தால் சுவாசிக்க சிரமம் இல்லாமல் இருக்கும் என்பது சரிதான். ஆனால், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களில் பலருக்கும் இருக்கும். 

புரோனிங் முறை என்பது பெரிய கஷ்டமான செயல்முறை எல்லாம் ஒன்றுமில்லை. வயிறும், மார்பும் படுக்கையில் இருக்கும்படி கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த புரோனிங் என்பது மிக முக்கியமானது.

1970 களில், ARDS நோயாளிகளுக்கு சிறந்த வாயு பரிமாற்றத்திற்காக முதல் முறையாக புரோனிங் செயல்முறை உதவும் என்பது கண்டறியப்பட்டது.

COVID -19 நோயாளிகளில் சுவாச பிரச்சினை ஏற்படாமல் இருக்க 3 நிலைகளில் மாறி மாறி படுத்துக் கொள்ள வேண்டும்: 

முதலில் சிறிது நேரம் வயிறு பகுதி கீழே படும்படி படுத்துக்கொள்ள வேண்டும். 

அடுத்து வலதுபுறமாக ஒருக்களித்துப் படுத்திருக்க வேண்டும்.

பிறகு, இடதுபுறமாக ஒருக்களித்துப் படுத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

புரோனிங் செயல்முறையின் போது நிம்மதியான சுவாசத்தை உறுதிப்படுத்த 4-5 தலையணைகளைப் பயன்படுத்தலாம்:

கழுத்துக்கு கீழே 1 தலையணையையும், மார்பு மற்றும் மேல் தொடைகளுக்கு கீழே 1-2 தலையணைகளையும், தாடைக்குக் கீழே 2 தலையணைகளையும் வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.

இந்த புரோனிங் முறை COVID -19 நோயாளிகளின் சுவாசத்தை மேம்படுத்துவது எப்படி?

ஒரு COVID-19 நோயாளி புரோனிங் நிலையில் படுத்துக் கொள்கையில்:

  • நுரையீரல் (முதுகெலும்பு பகுதி) விரிவடைந்து, நுரையீரலுக்கு மேம்பட்ட காற்றோட்டத்தை அனுமதிக்கிறது
  • மூச்சுக்குழாய்களின் முடிவில் சிறிய காற்றுப் பைகளான ஆல்வியோலி அலகுகளைத் திறக்கிறது 
  • உதரவிதானம், நுரையீரலில் உடல் எடையைக் குறைக்கிறது
  • முன்கூட்டியே, நுரையீரல் திரவங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட சுரப்புகளை வெளியேற்றுவதை மேம்படுத்துகிறது
  • நுரையீரல் வழியாக இரத்தத்தை செலுத்தும் இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளின் செயல்திறனை மேம்படுத்துகிறது

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் மேம்பட்ட, எளிதான ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகின்றன; இதன் மூலம் COVID-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் குறையும்.

எனவே, COVID-19 நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுவதால் புரோனிங் மிகவும் ஏற்ற செயல்முறையாக பரிந்துரைக்கப்படுகிறது.

Views: - 192

0

0