உலக புற்றுநோய் தினம் 2021: இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? “I am and I will”

4 February 2021, 11:50 am
World Cancer Day 2021 Theme, history and significance
Quick Share

உலக புற்றுநோய் தினம் வருடா வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (Union for International Cancer Control – UICC) தலைமையிலான உலகளவில்  ஒன்றுபடுவதற்கான ஒரு முயற்சியாகும். உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணம் ஆக பார்க்கப்படும் நோய் புற்றுநோய்தான். 

புற்றுநோய் என்றால் என்ன? 

இன்னும் பலருக்கும் புற்றுநோய் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இல்லை. உடலில் உள்ள உயிரணுக்களில் ஒரு குழுவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி தான் புற்றுநோய் என்பதாகும். இது எந்த வயதிலும் ஏற்படலாம் மற்றும் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

எச்.ஐ.வி / எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை விட உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் ஆறு பேரில் ஒருவர் இறந்துவிடுவதாக சமீபத்திய ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. எனவே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்கும், உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 அன்று ஒரு சர்வதேச நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது.

உலக புற்றுநோய் தினம் 2021: கருப்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளோடு உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதே போல் 2021 ஆண்டும் ‘என்னால் முடியும் நான் செய்வேன்’ என்னும் கருப்பொருள் உடன் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டைப் பொறுத்தமட்டில் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைப்பின் ஆற்றலை நினைவூட்டும் தினமாக பார்க்கப்படுகிறது.

நாம் ஒன்றாக முயற்சி செய்யும், ​​நாம் அனைவரும் விரும்புவதை நம்மால் அடைய முடியும்: அதாவது புற்றுநோய் இல்லாத ஆரோக்கியமான, பிரகாசமான உலகத்தை உருவாக்க முடியும்.

உலக புற்றுநோய் தினம்: வரலாறு

உலக புற்றுநோய் தினம் 2000 வது ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டின் போது தோன்றியது. 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலக புற்றுநோய் பிரகடனத்தின் குறிக்கோள்களை ஆதரிப்பதற்காக சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் (UICC) இந்நாள் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக புற்றுநோய் தினத்தின் முதன்மை குறிக்கோள் புற்றுநோயின் தீவிரம் மற்றும் மரணத்தை கணிசமாகக் குறைப்பதாகும்.

உலக புற்றுநோய் தினத்தை நாம் எப்படி அனுசரிக்கலாம்?

இந்த உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பள்ளிகள், வணிகங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், பூங்காக்கள், சமூக அரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், தெருக்கள், ஆன்லைன் சமூக ஊடகங்கள், போன்ற இடங்களில் தங்களால் முடிந்தவாறு விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். புற்றுநோயின் உலகளாவிய தாக்கத்தை குறைப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதையும் நாம் இந்நாளில் நினைவு கூற வேண்டும்.

Views: - 26

0

0