இன்னும் 10 கிரிமினல் வழக்கு ராகுல் மேல இருக்கு… 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது : நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 11:46 am
Jail Rahul - Updatenews360
Quick Share

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.

அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.

கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட்டு நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும் . ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Views: - 221

0

0