உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்கள் மீட்பு…டெல்லி வந்தடைந்தது 2வது விமானம்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்பு..!!

Author: Rajesh
27 February 2022, 9:09 am
Quick Share

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இதனால், இந்தியாவில் இருந்து படிப்பு மற்றும் வேலை ரீதியான சென்றவர்கள் அங்கு சிக்கித்தவித்தனர். இந்தியாவை பொறுத்தவரை, உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கடந்த 24ம் தேதி மத்திய அரசு அறிவித்து இருந்தது. அங்கு போர் மேகம் சூழ்ந்ததும் கடந்த 22ம் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் 240 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

ஆனால் கடந்த 24ம் தேதி போர் தொடங்கியதுமே, உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது.


உக்ரைனில் வசித்து வரும் இந்திய மாணவர்கள் தங்களை மீட்கக்கோரி வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதேநேரம் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு வரச்செய்து அங்கிருந்து விமானம் மூலம் மீட்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் திட்டமாகும். இதற்காக ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு சென்ற விமானங்களில் முதல் விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டது. இந்த விமானம் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் வரவேற்றார்.

மேலும் அங்குள்ள நிலவரங்களையும் அவர் கேட்டறிந்தார். அப்போது, விமானத்தில் வந்திருந்த மாணவர்கள், ஜெய்ஹிந்த் என கோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. அதில் பயணம் மேற்கொண்டவர்களை மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர்.

Views: - 1087

0

0