மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு.. தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 4:12 pm
DA -Updatenews360
Quick Share

மத்திய அரசு ஊழியாகளுக்கு அகவிலைப்படி 4% உயர்வு.. தேதியுடன் வெளியான அறிவிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

அதாவது, அகவிலைப்படி (dearness allowance) 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்துவது மூலம் 47 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். மத்திய அரசின் இந்த முடிவு தீபாவளி பரிசாக பார்க்கப்படுகிறது.

இந்த 4 சதவீத அகவிலைபடி உயர்வு மூலம் ரூ.18,000 அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியருக்கு கிடைக்கு 7,560 ரூபாய் அகவிலைப்படி தொகை 8,280 ரூபாயாக அதிகரிக்கும். அதாவது, சுமார் 720 ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியருக்கு கூடுதலாக DA-வில் 2276 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, துணை ராணுவ படைகள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட குரூப் சி மற்றும் குரூப் பி (Non-Gazetted) அதிகாரிகளுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Views: - 303

0

0