காலிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் தொடர்பா..? நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

Author: Babu Lakshmanan
27 September 2023, 10:27 am

காலிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தக் கொலை சம்பவத்தில் இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம்சாட்டியது தொடர்ந்து, இரு நாடுகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தப் பரபரப்பான சூழலில் கனடாவில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இவர், கனடாவை சேர்ந்த காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லாவின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளார். அர்ஷ்தீப் தல்லாவுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என தெரிய வந்தது.

இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை குறிவைத்து, தல்லா திட்டமிட்டு இருந்த விவரங்களை டெல்லி போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடித்தனர். 25 வழக்குகளில் குற்றவாளியாக தேடப்படும் தல்லா, பஞ்சாப்பின் மொகா பகுதியை சேர்ந்தவர்.

இந்த சூழலில், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்பட நாடு முழுவதும் 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லா கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் 51 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?