காங்கிரஸா..? திமுகவா…? குழப்பத்தில் கமல்ஹாசன்… உதயநிதியை பார்த்து பம்புகிறார் ; அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!!

Author: Babu Lakshmanan
27 September 2023, 11:08 am
Quick Share

கமலஹாசன், காங்கிரசில் சேர்வதா?, திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் நடைபெற்று வரும் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் துவங்கி, ராஜ வீதி பகுதியில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதி உரையாற்றிய அண்ணாமலை பேசியதாவது:- பாஜக ஒரு நாள் ஆட்சிக்கட்டிலில் அமரும். கோவை தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோவை தெற்கு தொகுதியின் பாஜக வெற்றி சாட்சியாக உள்ளது. கோவை பாராளுமன்றம் பாஜக கோட்டை என்பதை நிரூபித்து காட்டுவோம். கல்லூரி நிகழ்ச்சியில் விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல. பாராளுமன்றத்தில் கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996 ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோவை கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டது. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட என்.ஐ.ஏ. 13 பேரை கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை எனில், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோவைக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் என்ற மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோவை மக்கள் தப்பியுள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோவையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம்.

சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல், பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோவை மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா?, திமுகவில் சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா?

நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து பம்புகிறார். கமல்ஹாசனின் தோளை கோவை மக்கள் முழுமையாக உறித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள். இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட்களை ஒதுக்கி விட்டார்கள். கோவை, திருப்பூரில் மட்டும் ஒட்டிக் கொண்டுள்ளார்கள். வளர்ச்சி பிடியில் உள்ள நகருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. இருப்பது முரண். 2024ல் கம்யூனிஸ்ட்டை எங்கோ வைப்பீர்களோ, அங்கே வைப்பீர்கள் என நம்புகிறேன்.

மகளிர் உரிமைத் தொகை பெரும்பலானவர்களுக்கு வரவில்லை. சனாதனம் குறித்து பேசிய சின்ன பையன் உதயநிதியை பாஜகவினர் அடியோ அடி என அடிக்கிறார்கள் என சொல்லும் கமல்ஹாசன், 1098க்கு அழைத்து புகார் அளிக்கலாம். 42 வயதான உதயநிதி ஸ்டாலின் 4 வயது குழந்தை போல பேசுகிறார். சனாதன தர்மம் என்ன எனத் தெரியாமல் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை வேரறுப்போம் என பேசுகிறார். பெண்கள் வீதிக்கு வந்து நம்மை வாழ்த்த உதயநிதி ஸ்டாலினின் சனாதனத்தை வேரறுப்போம் என்ற பேச்சே காரணம். இந்த பேச்சால் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வேல் யாத்திரையின் போது வேலோடு அழைத்தது போல, 2024ல் இந்து மதம் நல்ல மதம் என முதலமைச்சர் சொல்லும் டிராமா நடக்கும். சனாதன தர்மம் தான் மற்ற மதத்தையும் மதிக்கும் தர்மம். சனாதன தர்மத்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சனாதன தர்மம் வெறுத்து இருந்தால், ஒரு கிறிஸ்தவர், முஸ்லிம் இங்கே இருக்க முடியுமா? பாஜக என்றால் இந்துத்துவா கட்சி என பொய் பிரச்சாரம் செய்தார்கள். திமுகவின் சாதி அரசியல், மத அரசியல், குடும்ப அரசியலை ஜல்லிஜல்லியாக உடைத்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

2024 தேர்தல் எப்படி போகும் என்பது நமது கையில் இல்லை. நாடாளுமன்றத்திற்கு மட்டும் ஓட்டு போடுவீர்களா? சட்டமன்றத்திற்கும் ஓட்டு போடுவீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் எத்தனை தேர்தல் வந்தாலும் உங்கள் கை தாமரை பட்டனை அமுத்தும். 9 ஆண்டுகளாக மோடி இந்தியாவிற்காக உழைக்கிறார். பாஜக மீது பொய் செய்திகள் பரப்பப்படுகிறது.

2019ல் செய்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது. ஒரு பொய் செய்தி மக்களை ஏமாற வைத்துவிட்டது. அடுத்த ஏழு மாதங்களுக்கு அதிகமான பொய்கள் பரப்பப்படும். ஒரு பொய்யை பார்த்து கடந்து போகாமல், ஒரு பதிவை போடுங்கள், ஒவ்வொருவரும் நரேந்திர மோடியாக அடுத்த ஏழு மாதங்களுக்கு வேலை செய்ய வேண்டும். 400 எம்.பி.க்களுடன் மீண்டும் மோடி பிரதமராக அமருவார். மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்ததால், காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. மோடி மீது ஊழல் புகார்களை கூறும் முதலமைச்சருக்கு நீங்கள் பதிலடி தருவீர்கள். 39க்கு 39 எம்.பி.க்களை தந்து மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

Views: - 308

0

0