விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கு : மீண்டும் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு…

Author: kavin kumar
27 January 2022, 6:16 pm
Quick Share

விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகை 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் அதைப் பார்த்தார் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொல்ல, திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திலீப், அவர் சகோதரர் அனூப், திலீப்பின் மைத்துனர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செம்மங்காடு உட்பட 6 பேர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் திலீப் உட்பட 6 பேரும் ஜனவரி 23, 24 மற்றும் 25-ம் தேதிகளில் போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் திலீப், கமலச்சேரியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது, பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கையை, சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, டிஜிட்டல் சாட்சியத்தை ஆய்வுசெய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு கோரியதை அடுத்து, திலீப்பின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, பிப்ரவரி 2-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

Views: - 410

0

0