திடீர் மேகவெடிப்பால் அமர்நாத் யாத்ரீகர்கள் பாதிப்பு… வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி… புனித யாத்திரை தற்காலிக ரத்து..!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 10:30 am
Quick Share

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிக்குகையை நோக்கிய புனித யாத்திரை தற்போது தொடங்கி நடந்து வருகிறது. காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து ஜுன் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இந்த யாத்திரை நடக்கிறது. இதில், பங்கேற்க சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, பல்வேறு நாட்டவர்கள் கூட இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமர்நாத்தில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத. இதனால், யாத்திரை மேற்கொண்டவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களும் இன்று மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30 முதல் 40 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 607

0

0