தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்… வாக்களித்தவர்களை நினைத்து அழுதபடியே வெளியேறியதால் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
1 August 2023, 12:39 pm

வாக்களித்தவர்களை நினைத்து தன்னை தானே கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு என்பவர் இருந்து வருகிறார். இவர் தேர்தலின் போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

இதனிடையே, 31 மாதங்கள் ஆகியும், அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்காததால் தனது வார்டு மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த சூழலில், நேற்று நகரசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர் ராமராஜு, எழுந்து நின்று, தன்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் பேசினார். அப்போது, திடீரென யாரும் எதிர்பாராத விதமாக, தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார் ராமராஜு. அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

தேர்தலின் போது தனது வார்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத விரக்தியில், கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!