அயோத்தி கோவில் எழுந்தருளினார் பால ராமர்… மனமுருக வேண்டிய பிரதமர் மோடி ; விண்ணைப் பிளந்த ஜெய்ஸ்ரீ ராம் கோஷம்..!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 1:26 pm
Quick Share

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி கோவிலில் பால ராமருக்கு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை தீபாவளி போன்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் ராமர் கோவில் மட்டுமின்றி, அயோத்தி நகரமே அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளன.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களும், ரஜினிகாந்த், விக்கி கௌசல், கத்ரினா கைஃப், ரன்பீர் கபூர், அலியா பாட், ராம் சரன், சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பகல் 12.20 மணியளவில் ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பால ராமருக்கு பிரதமர் மோடி விசேஷ பூஜைகளை செய்தார். பின்னர், பாதங்களில் தாமரை மலர்களை தூவியும் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.

இதனையடுத்து, அயோத்தி கோவிலில் குழந்தை ராமர் எழுந்தருளினார். பின்னர், சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ராமரை வழிபட்டார். பின்னர், கோவிலில் இருந்த ஆன்மீகவாதிகளுக்கு பரிசுகளை வழங்கியதுடன், அவர்களிடமும் ஆசியும் பெற்றார்.

ராமருக்கு செய்யப்பட்ட பிராண பிரதிஷ்டை நிகழ்வை கோவிலின் வெளிப்புறங்களில் இருப்பவர்களும் காணும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Views: - 231

0

0