பெண்கள் குறித்து ஆபாசப் பேச்சு… சட்டசபையில் பாஜக கடும் எதிர்ப்பு ; மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் நிதிஷ்குமார்!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 2:12 pm
Quick Share

சட்டசபையில் பெண்கள் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆபாசமாக பேசியதை திமுக ஆதரிக்கிறதா…? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அப்போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவர் விளக்கமளித்தார். அப்போது, பெண்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அறிவு பெற்றிருந்தால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். கணவரின் செயல்பாடுகள் தான் அதிக குழந்தை பிறப்புக்கு காரணமாகிறது. எனினும், கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெண்களுக்கு தெரியும், தற்போது பிறப்பு விகிதம் சரிந்து வருவதற்கு இதுவே காரணம் ஆகும், என நகைச்சுவை பாணியில் பேசினார்.

மேலும், உடலுறவு குறித்து சைகை செய்தபடி அவர் சட்டசபையில் பேசியது பெண் எம்எல்ஏக்களை முகம் சுழிக்க வைத்தது. அவரது பேச்சுக்கு பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடிய போது, பாஜக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் பதாகைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமாரை பேச விடமால் கோஷங்களை எழுப்பினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது பேச்சை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

இதனிடையே, கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Views: - 262

0

0