உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் கர்நாடகம் வந்தடைந்தது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் அஞ்சலி..!!

Author: Rajesh
21 March 2022, 8:35 am
Quick Share

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் 20 நாட்களுக்கு பிறகு இன்று இந்தியா வந்தடைந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கியது. இதனால் உக்ரைனில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்தனர்.

தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தின.இதனால் கார்கிவ் நகரில் சிக்கிய இந்திய மாணவர்கள் பதுங்கி குழிகளில் தங்கி இருந்தனர். கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் நவீன் கடந்த 1ம் தேதி உணவு பொருட்களை வாங்குவதற்கு அங்கிருந்து மேலே வந்து ஒரு கடையின் முன்பு வரிசையில் நின்றிருந்தார்.

அப்போது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் நவீன் உயிரிழந்தார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று அதிகாலை 3 மணிக்கு கர்நாடகம் கொண்டு வரப்பட்டது.

விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து நவீனின் உடல் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் அஞ்சலி செலுத்தினார். இறுதிச்சடங்குகள் முடிவடைந்ததும் அவரது உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். உயிரிழந்து 20 நாட்களுக்கு பிறகு நவீனின் உடல் எடுத்து வரப்படுவதால் அவரது பெற்றோர் துக்கத்திலும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Views: - 910

0

0