பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்… பிரபல தொழிலதிபர் ஒப்புதல் ; வசமாக சிக்கிய மம்தா கட்சி எம்பி..!!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 9:41 am
Quick Share

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிரானக கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழிலதிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த நிலையில், அதானி குழுமம், பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, பிரபல தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தானியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக, பாஜகவின் நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், பிரதமர் மோடி மற்றும் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, பிரபல தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். திரிணாமுல் எம்.பி.க்கு ஹிரானந்தனி ரூ.2 கோடியும், விலை உயர்ந்த ஐ-போன் போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக 75 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

கடந்த 2019 மற்றும் 2023க்கு இடையில் எம்பி கேட்ட 61 கேள்விகளில், 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் உத்தரவின் பேரில் இருந்துள்ளது. மேலும், அந்த தொழிலதிபருக்கு தனது மக்களவைக் கணக்கிற்கான ஐடி மற்றும் பாஸ்வேர்டை வழங்கியுள்ளார். எனவே, அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், என்று கூறினார்.

பாஜகவின் நிஷிகாந்த் துபேவின் இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மறுப்பு தெரிவித்த நிலையில், மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற நெறிமுறை குழுவுக்கு அவர் எழுதிய வாக்குமூல கடிதத்தில் கூறியிருப்பதாவது :- நாடு முழுவதும் பிரபலமடைய விரும்பிய மஹுவா மொய்த்ராவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தால் எளிதாக பிரபலம் அடையலாம் என்று சிலர் ஆலோசனை வழங்கினர். அதன்பேரில், பிரதமர் மோடியை குறிவைத்து அதானியை விமர்சிக்க ஆரம்பித்தார். அவருக்கு தேவையான தகவலை நான் வழங்கினேன்.

அவர் தனது நாடாளுமன்ற இணையதள கணக்கின் முகவரியையும், அதன் கடவுச்சொல்லையும் என்னிடம் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அதானிக்கு எதிரான கேள்விகளை இணையதளம் மூலமாக நாடாளுமன்றத்தில் அவ்வப்போது முன்வைத்தேன். இதை பயன்படுத்தி அவர் என்னிடம் விலை உயர்ந்த பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு உள்ளிட்ட சலுகைகளை பெற்றார்.

நான் மட்டுமல்ல, பிரதமர் மோடியை விமர்சிக்க பலர் உதவினர். குறிப்பாக, நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடனும் அவர் தொடர்பில் இருந்தார். அவர் மூலமாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் என் தொழிலுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தள்ள மஹுவா மொய்த்ரா, பிரதமர் அலுவலகத்தால் இந்த கடிதத்தில் தர்ஷனை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் புயலை கிளப்பியுள்ளது.

Views: - 300

0

0