தமிழகத்திற்கு நீர் திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு… கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு… பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 8:32 am

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு காலம் காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைதூக்கிய நிலையில், தமிழகத்திற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்போவதில்லை என்று கர்நாடகா அரசும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதையடுத்து, டெல்லியில் காவிரி ஒழுங்காற்று ஆணையம் இன்று அவசர அவசரமாக கூடுகிறது.

இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பையொட்டி, பெங்களூரூவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், வழக்கம் போல தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் சுமார் 500 பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல, மற்றொரு எல்லையான நீலகிரி தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!