MLA விஜயதாரணி மட்டுமல்ல… வாரிசுடன் பாஜகவுக்கு தாவும் முன்னாள் முதலமைச்சர்… காங்கிரசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
17 February 2024, 2:58 pm
Bjp Congress - Updatenews360
Quick Share

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தனது வாரிசுடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நாடு முழுவதும் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா எனும் கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருகிறது.

ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இண்டியா கூட்டணியில் இருந்து தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல், இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்திருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக கூட்டணிக்கு தாவி அதிர்ச்சி கொடுத்தார். இதனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் அதிர்ந்து போயினர்.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் நெருங்க நெருங்க கட்சி தாவல்களும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 17 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு திமுக முன்னாள் எம்பி என 18 பேர் பாஜகவில் இணைந்தனர். இது திமுக, அதிமுக கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்தது.

அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜய் தாரணி உள்பட 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில், விஜய் தாரணியை காங்கிரஸ் கட்சியினர் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பாஜகவுக்கு தாவ இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் டெல்லி காங்கிரஸிடம் சென்ற நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையின் நடவடிக்கைகளினால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், ராகுல் காந்தி யாத்திரை மத்திய பிரதேசத்திற்கு வரும் போது, அவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், கமல்நாத், அவரது மகன் நகுல்நாத்துடன் பாஜகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. கமல்நாத் டெல்லி சென்ற நிலையில், X தளத்தில் இடம்பெற்றுள்ள தனது சுயவிபர குறிப்பில் காங்கிரஸ் என்று இருந்த வார்த்தை அவர் நீக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, தேர்தலில் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Views: - 395

0

0