நாளை உருவாகிறது டானா புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?
Author: Hariharasudhan22 அக்டோபர் 2024, 11:32 காலை
வங்கக் கடலில் நாளை (அக்.23) உருவாகும் புயலுக்கு டானா (DANA) என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 23ஆம் தேதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற இருக்கிறது. இதனையடுத்து புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து விலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்கிறது.
இவ்வாறு உருவாகும் இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் கடல் பரப்பில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அது வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இது நாளை புயலாக மாறி, நாளை மற்றும் நாளை மறுநாள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பாரதீப்பிற்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 770 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபூராவிற்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 740 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு – வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை டானா புயலாக மத்திய கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெறும். மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வடமேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (அக்.24) காலை வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மறுநாள் இரவு மற்றும் 25ஆம் தேதி அன்று காலையில் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மாலை உயர்வு.. காலை குறைவு – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?
இதனால் இரு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு மாநிலப் பேரிடர் துறைகளை அந்தந்த மாநில அரசுகள் உஷார்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மாநில பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் படை உபகரணங்கள், களப் பணியாளர்கள் ஆகியோரும் தயார் நிலையில் உள்ளதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
0
0