முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. தலைநகர் டெல்லியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 12:50 pm
Quick Share

தலைநகர் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளின் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்தும் கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில், பென்சன் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் சென்று கொண்டிருக்கின்றனர்.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அவர்களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகளில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

கைது செய்யப்படும் விவசாயிகளை டெல்லி பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தை தற்காலிக சிறையாக மாற்றும் திட்டத்தை டெல்லி மாநில அரசுக்கு அனுப்பி அனுமதி கோரியது. ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாகக் கூறி இந்த திட்டத்தை மாநில அரசு நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியின் ஷாம்பு எல்லைப் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை போலீசார் வீசியுள்ளனர். இதனால், அங்கிருந்த விவசாயிகள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

Views: - 263

0

0