‘போலீசார் கண்முன்னே எங்களை தாக்கினாங்க…ஆனா யாரும் கண்டுக்கல’: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை., மாணவர் அமைப்பு குமுறல்..!!

Author: Rajesh
11 April 2022, 5:32 pm
Quick Share

புதுடெல்லி: போலீசார் முன்னிலையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் ராமநவமியை முன்னிட்டு நேற்று இரவு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 முதல் 60 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் பிஎச்.டி மாணவியான சரிகா என்பவர் கூறும்போது, அசைவ உணவு சாப்பிடுவதில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க முற்பட்டனர். இதற்கு பிற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதலில் 60 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

இதுபற்றி, ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்திற்கான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ரோகித் குமார் கூறும்போது, ராமநவமியை முன்னிட்டு பல்கலை கழகத்தில் நடந்த பூஜையில் இடதுசாரியினர் மற்றும் என்.எஸ்.யூ.ஐ. அமைப்பினர் கலகத்தில் ஈடுபட்டனர்.

இதில், அசைவ உணவு பற்றிய விவகாரமே இல்லை. ராமநவமியை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நடத்துவதில் அவர்களுக்கு ஏதோ பிடித்தம் இல்லாமல் இருந்து உள்ளது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். காயமடைந்த நபர்கள் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் நிலைமையை கவனித்து வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் மாணவர் அமைப்பு இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், அவர்கள் (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) தடிகள், பூந்தொட்டிகளை ஆகியவற்றை கொண்டு அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 2 மாணவர்கள், 2 பாதுகாவலர்கள் காயமடைந்து உள்ளனர். போலீசாரிடம், மாலையில் வன்முறை நிகழ கூடும் என முன்பே தகவல் தெரிவித்து இருந்தோம். எனினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வன்முறை சம்பவம் நடந்தபோது கூட, போலீசார் முன்னிலையிலேயே அவர்கள் எங்களை மிரட்டினார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜே.என்.யு. நிர்வாகமும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது. இந்நிலையில், போலீசார் இன்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் அடையாளம் தெரியாத உறுப்பினர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 1035

    0

    0