இந்திய அணியின் தோல்வியால் அதிர்ச்சி… சாப்ட்வேர் என்ஜினியருக்கு நேர்ந்த சோகம்; கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
20 November 2023, 11:08 am
Quick Share

இந்திய அணியின் தோல்வியால் ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு கில் (4) ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார். அவர் இந்தப் போட்டியிலும் அரைசதம் (47)அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஸ்ரேயாஷ் ஐயர் (4) ஏமாற்றம் அளித்த்ர். இதனால், இந்திய அணி 81 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி – கேஎல் ராகுல் ஜோடி விக்கெட் விழாமல் நிதானமாக ஆடினர்.

ஒரு கட்டத்தில் கோலி (56), கேஎல் ராகுல் (66) அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், நடப்பு உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக இந்திய அணி ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (7), மார்ஷ் (15), ஸ்மித் (4) ஆகியோரின் விக்கெட்டுக்களை 50 ரன்னுக்குள் இந்திய அணி கைப்பற்றியது. இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், டிராவிஸ் ஹெட் (137), லபுஷக்னே (58 நாட் அவுட்) ஆகியோர் சிறப்பாக ஆடி, 43 ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம், 6வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அனைத்தையும் தவிடு பொடியாக்கியது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டம்.

12 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் என காத்திருந்த இந்திய ரசிகர்களால் இந்த தோல்வியை ஜுரணிக்க முடியவில்லை. ரசிகர்கள் மைதானங்களிலேயே அழுது வெதும்பி போகினர்.

இப்படியிருக்கையில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்ற சாப்ட்வேர் என்ஜினியர், இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். இந்திய அணியின் தோல்வியால் ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 299

0

0