மனைவியை மீட்டு தராவிட்டால் 48 மணிநேரத்தில் தற்கொலை… இருபெண் குழந்தைகளுடன் கணவர் வெளியிட்ட பகீர் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 5:37 pm
Quick Share

தெலுங்கானா : மர்மமான முறையில் காணாமல் போன தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் 48 மணி நேரத்திற்குள் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி பாதிக்கப்பட்ட கணவர் ஒருவர் பதிவு செய்துள்ள செல்பி வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டோரிஷெட்டி சத்தியமூர்த்தி. அவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், 14, 16 ஆகிய வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி அன்னபூரணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியே சென்று பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, சத்தியமூர்த்தி காவல் நிலையத்தில் என்னுடைய மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுவரை அவரை கண்டுபிடித்து தரவில்லை. இதனால், மனம் வேதனை அடைந்த கணவன் சத்தியமூர்த்தி, தனது குழந்தைகளுடன் இன்று ஒரு செல்பி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், தனது மனைவியை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும். தனது மனைவி வைத்திருந்த செல்போனின் சிக்னல் மூலமாகவோ அல்லது சிசிடிவி காட்சிகள் மூலமாகவோ உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள போவதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 336

0

0