உதயநிதி ஸ்டாலினால் திமுக அரசுக்கு ஆபத்தா…? பாஜக போட்ட புது குண்டு!

Author: Babu Lakshmanan
27 June 2022, 5:00 pm
Quick Share

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேரால் கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

மைனாரிட்டி அரசு

இந்த எம்எல்ஏக்கள் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் ஒரு ஓட்டலில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் தங்கியுள்ளனர்.
மராட்டியத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இதே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனால் சில நாட்களுக்கு முன்பு வரை பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையுடன் இருந்த உத்தவ் தாக்கரே அரசு, தற்போது சொந்த கட்சி எம்எல்ஏக்களால் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அதிருப்தி எம்எல்ஏக்களின் முக்கிய கோரிக்கை.

இதற்கு முட்டுக்கட்டையாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சி எம்எல்ஏக்கள் ஒருவர் கூட முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச முடியாதபடி ஆதித்ய தாக்கரே தடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

புதிய கட்சி

அதுமட்டுமின்றி கட்சியிலும், ஆட்சியிலும் ஆதித்ய தாக்கரேதான் ஆதிக்கம் செலுத்துகிறார். அதனால் எந்த பிரச்சினை என்றாலும் முதலமைச்சரை சந்திக்க முடியாத சூழல்தான் உள்ளது. இதுபற்றி பல நேரங்களில் தகவல்கள் அனுப்பியும் அவரை சென்று சேர விடாமல் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஆதித்ய தாக்கரே இருவரும் தடுத்துவிட்டனர் என்றும் ஏக்நாத் ஷிண்டே பக்கமுள்ள எம்எல்ஏக்கள் மனம் குமுறுகின்றனர்.

இதனால் மராட்டிய அரசின் நிலைத் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்படும் நிலையில் உள்ளார்.

சிவசேனாவின் அதிருப்தி தலைவர் ஏக்நாஷ் ஷிண்டே, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் பெயரை நினைவு படுத்தும் விதமாக ‘சிவசேனா பாலா சாஹிப்’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுகவுக்கு ஆபத்து

இப்படியொரு பரபரப்பான சூழலில், மராட்டிய அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அதை திமுக அரசுடன் ஒப்பிட்டு மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான வினோஜ் பி. செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

“தகுதியற்ற வாரிசுகளை முன்னிறுத்தியதால் சரிந்த, சரியப் போகும் கட்சிகள்…நேற்று அகாலி தளம், இன்று சிவசேனா, நாளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, நாளை மறுநாள் திமுக” என்பதுதான் அந்த பதிவு.

தனது பதிவை அவர் அறிவாலயத்திற்கு டேக் செய்தும் இருக்கிறார். இதனால் திமுக தலைமை கடும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதியை, அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக அமைச்சர்களிடம் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளாலும் கடந்த சில மாதங்களாக உரக்க எழுப்பப்பட்டு வரும் நிலையில் வினோஜ் செல்வத்தின் ட்விட்டர் பதிவு வெளியாகி இருப்பதுதான்.

மகன் ராஜ்யம்

அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, சிவசேனா எம்எல்ஏக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலையை தமிழக பாஜகவும் ஏற்படுத்துமோ? என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

ஆனால் இதை மறுத்து வினோஜ் செல்வம் கூறும்போது,”மராட்டியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பாஜக காரணமில்லை. தமிழகத்திலும் பாஜக அவ்வாறு முயற்சிக்கப் போவதில்லை. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று கவனித்தீர்களா? ‘நாங்கள் யாரும் முதலமைச்சரின் வீட்டுக்கே செல்ல முடியவில்லை. அவரிடம் எந்த தகவலையும் தெரிவிக்க முடியவில்லை. எல்லாமே அவருடைய மகன் ராஜ்யம்தான் என்கிறார்கள். தமிழகத்திலும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான். இங்கு திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் என்ன, அமைச்சர்களே கூட முதலமைச்சரை நினைத்தவுடன் சந்திக்க முடியவில்லை. இங்கே மகன் குழு, மருமகன் குழு என்று இரண்டு குழுக்கள் உள்ளன.

இவற்றைத் தாண்டி முதலமைச்சரை திமுகவின் முக்கிய நிர்வாகிகளால் கூட நெருங்கமுடியவில்லை என்பதை திமுகவினரே ஒப்புக் கொள்கிறார்கள்.  தன்மானத்தை விட்டு அவர்கள் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பார்கள்? ஏதோ ஒரு இடத்தில் கொதிநிலையை அடைய மாட்டார்களா, என்ன?திமுகவினருக்குள் இருக்கும் உணர்வுகளை அறிந்துதான் இந்த கருத்தை நான் சொன்னேன். மற்றபடி மராட்டியத்திலும் சரி, தமிழகத்திலும் சரி பாஜக எந்த முன்னெடுப்பையும்  மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார்.

பலவீனம்

“பாஜக தலைவர்களில் ஒருவர் இப்படி எச்சரித்திருப்பது திமுகவுக்கு மட்டும் பொருந்தாது. நமது நாட்டில் குடும்ப அரசியல், வாரிசு அரசியலை முன்னெடுத்து நடத்தும் அத்தனை கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு அறிவுரைதான் இது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“பல கட்சிகள் பலவீனமாகி போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகாலி தளம், தேசிய மாநாட்டு கட்சி போன்றவை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதில் வாரிசு அரசியலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு. அந்த வரிசையில் சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திமுக போன்ற ஆளும் கட்சிகளும் உள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகன் ராமராவ் இருவரும் தந்தையின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். அதேபோல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதியை அமைச்சராக்கும் கோரிக்கை தற்போது திமுகவினரால் எழுப்பப்படுகிறது.

stalin-udhayanidhi-updatenews360

திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உதய நிதி அமைச்சராக வேண்டும் என்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் கேலியாகவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென  உதயநிதி கேட்டுக் கொண்டார்.

இதன் மறைமுக அர்த்தம், தந்தையாக பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கட்டும். அதுவரை காத்திருப்போம் என்று கூறுவது போல இருக்கிறது.

மேலும் திமுகவில் மட்டும் தந்தை, மகன், மகள், அவருடைய உறவினர்கள் என்று 60-க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ, எம்பி, மேயர், நகர்மன்றத் தலைவர், மாவட்ட செயலாளர்கள் அந்தஸ்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது கட்சி தொண்டர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்போதே கணித்து விட முடியாது.

எனவே குடும்ப மற்றும் வாரிசு அரசியலை அடக்கி வாசிப்பதுதான் நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் நல்லது. அரசியல் ஒரு தொழில், வியாபாரம் போல் ஆகி விடாமல் தடுக்கவும் அது உதவும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 523

0

0