மணிப்பூரில் பெண்ணை நிர்வாணாமாக்கிய கொடூரம்… முக்கிய குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய சொந்த கிராம மக்கள்…!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 10:54 am

மணிப்பூரில் பெண்ணை நிர்வாணமாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3 தேதி முதல் கலவரம் நடந்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ராணுவம், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் கலவரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரு பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹேராதாஸ் (32) என்பவரின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொருக்கினர். ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாகக் கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!