குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை : மீறினால் தண்டனை… சூப்பர் முடிவை எடுத்த கிராமம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 7:15 pm

கொரோனா தாக்கத்திற்குப் பிறகு குழந்தைகள் செல்போன்களைப் பார்க்கும் அளவு அதிகரித்திருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினாலும், ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தவாறு தான் உள்ளனர்.

மகாராஷ்டிராவின் எவட்மால் மாவட்டத்தில் பான்சி எனும் கிராமம் உள்ளது. கடந்த 11ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில், அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக ஒரு முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி தங்கள் கிராமக் குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர்.

இந்த உத்தரவை மீறி குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிறுவர், சிறுமியர் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும், சமூகவலைத்தளங்களில் உலாவுவதற்கும் அடிமையாகி விடாமல் தடுக்க முடியும் என அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.

இதுகுறித்து அக்கிராம பஞ்சாயத்து தலைவர் கஜானன் டேல் கூறுகையில், சிறிய குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கவே இப்படி ஒரு முக்கிய முடிவு எடுத்தோம். இதனை செயல்படுத்தும் போது தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். செல்போன்களால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

பான்சி கிராம மக்களின் இந்த வித்தியாசமான முயற்சி குறித்து, அம்மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், மராட்டியத்தில் உள்ள கிராமத்தில் தான் முதல்முறையாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆச்சரியப்பட வைக்கும் முறையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற கிராமங்களிலும் முயற்சி செய்ய தன்னார்வ தொண்டர்கள் முன்வர வேண்டும் என்றார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ள வட்கான் என்ற கிராமத்தில் இதே போன்றதொரு வித்தியாசமான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி தினமும் இரவு 7 மணி முதல் 8.30 வரை, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் டிவி மற்றும் செல்போன் பார்ப்பதை நிறுத்தி விட்டு, அக்கம்பக்கத்தாருடன் பேசி சிரித்து தங்களது நேரத்தைக் கழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!