திருமாவளவன் போடும் புது அரசியல் கணக்கு..! கை கொடுக்குமா..? காலை வாரி விடுமா…? திமுக கூட்டணியில் அதிருப்தி…?

Author: Babu Lakshmanan
18 November 2022, 5:59 pm
Quick Share

திமுக கூட்டணியில் இன்று முக்கிய கட்சிகளில் ஒன்றாக திகழும் விசிகவுக்கு சமீப காலமாகவே தனது கூட்டணியின் மீது அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறதோ என்று கருதக்கூடிய அளவிற்கு திருமாவளவனின் அரசியல் நடவடிக்கைகள் புரியாத புதிராக அமைந்துள்ளன.

ராஜீவ் கொலை கைதிகள் நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை மற்றும் முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.

திமுக கடுப்பு

அதேபோல கடந்த மாதம் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தேசிய அளவிலான தனது புதிய கட்சியின் தொடக்க விழாவுக்கு திருமாவளவனை தனிப்பட்ட முறையில் அழைத்து அவர் சிறந்த ஒரு போராட்டவாதி என்று பெருமைபடுத்தி பேசியதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள்.

thirumavalavan - chandrasekar rao - updatenews360

இதற்கு முக்கிய காரணம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தனது கட்சியின் கிளையை விரித்து தென் மாநிலங்களில் திருமாவளவன் திட்டமிட்டு தன்னை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவாக்கிக் கொண்டு வருகிறார். அதை திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விரும்பவில்லை என்று கூறப்படுவதுதான்.

அந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் சென்னையில் தனது கட்சி அலுவலகத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது திருமாவளவன் அதை மனம் நொந்து குறிப்பிடவும் செய்தார்.

திருமா., பேச்சு

அவர் கூறுகையில், “விடுதலை சிறுத்தைகளின் தொடக்க காலத்தில் பின் புலம், பரிந்துரை இல்லாமல், ஊடக பலம் இல்லாமல் நம் உழைப்பு பற்றி சொல்ல ஆட்கள் கிடையாது. எங்கோ சிலர் செய்யும் சில தவறுகளை நம் கட்சி மீது முடிச்சு போட்டு நான் தான் தலைவன் என அவதூறு அரசியல் பரப்புவார்கள். அவதூறு பரப்பும் மோசமான களம்தான் அரசியல் களம். அரசியல் என்பது அதிகாரத்தோடு தொடர்புடையதால் 360 டிகிரியிலும் பகை உண்டாகிறது. பின்புலம் இல்லாமல் ஒருவன் கிளம்பினால் எவ்வளவு அவதூறு வரும் என எண்ணிப்பார்க்கவேண்டும். கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் இருப்பார்கள். கடந்த 32 ஆண்டுகளில் விசிகவின் போராட்டங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வந்ததில்லை. லட்சக்கணக்கான மக்கள் இருந்தாலும் படம் போடாமல் இருட்டடிப்பு செய்வார்கள். விசிக மீது புறக்கணிப்பு வஞ்சனை இயல்பாக இருக்கும். இந்த 32 ஆண்டுகளில் அனைத்தையும் உடைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிடு பொடி ஆக்கியுள்ளது” என்று ஆவேசப்பட்டார்.

Thirumavalavan - Updatenews360

இதற்கிடையே ஆந்திர மாநிலம் குண்டூரில் திருமாவளவன் தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விசிகவின் அம்மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு தமிழக அரசியல் கட்சிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆந்திராவில் போட்டி

அதை திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார். அதில்,
“2024 நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என குண்டூரில் நடைபெற்ற விசிக ஆந்திர மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

thirumavalavan - updatenews360

இன்னொரு பதிவில் “ஆந்திர மாநிலம் பொன்னூரில் பட்டியல் இன இளைஞர் அன்ஞ்சி பர்னபாஸ் படுகொலையைக் கண்டித்து ஆந்திர மாநில விசிக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரை வழங்கினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த இரு பதிவுகளின் மூலம், அவர் ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

விசிக தலைவர் திருமாவளவன், திடீரென இப்படி ஆந்திர அரசியலில் அதிக கவனம் செலுத்துவது ஏன்? என்பது புரியாமல் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட
திமுக கூட்டணி கட்சிகள் பரிதவிக்கின்றன.

கூட்டணி

இத்தனைக்கும் ஆந்திராவுக்கு முன்பாக கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 2024 ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் விசிக போட்டியிட இருப்பதை இப்போதே அறிவிக்க வேண்டிய நெருக்கடி திருமாவளனுக்கு ஏன் ஏற்பட்டது?… என்னும் கேள்விகளும் எழுகின்றன” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“விசிக தற்போது தீவிரமாக செயல்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். ஆனால் இங்கு தனித்துப் போட்டியிடும் முடிவை திருமாவளவன் ஒருபோதும் எடுத்தது இல்லை. அப்படியொரு முடிவை இனி அக்கட்சி எடுக்கவும் வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் திருமா கடுமையாக எதிர்க்கும் பாஜக, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருவதுதான்.

அதனால் பாஜகவுக்கு எதிரான வலுவானதொரு கூட்டணியில் இருக்கவே அவர் விரும்புவார். விசிக தனித்துப் போட்டியிட்டால் அது பாஜக தமிழகத்தில் ஆழமாக வேரூன்றுவதற்கு வழி வகுத்து விடும் என்று கருதியும் அவர் இந்த முடிவை எடுக்கலாம்.

அதேபோல கர்நாடகாவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால் அங்கு விசிக அத்தனை தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் அது எதிரணிக்கு பாதகமாக அமையக் கூடும். அதனால் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு கடைசி நேரத்தில் தனது ஆதரவை விசிக தெரிவிக்கும் என்றே தெரிகிறது.

thirumavalavan - chandrasekar rao - updatenews360

தெலுங்கானாவை பொறுத்தவரை, சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்ற நிலை தற்போது காணப்படுகிறது. அதனால் அங்கு தனித்து போட்டியிட்டால் சந்திரசேகர ராவ் கட்சிக்குதான் பாதிப்பு ஏற்படும் என்பதை திருமாவளவன் நன்றாகவே உணர்ந்துள்ளார்.

அதனால் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் தெலுங்கானா மாநில தேர்தலிலும் அவர் ஆர்வம் காட்டமாட்டார். சந்திரசேகர ராவ் தனது கூட்டணியில் விசிகவை இணைத்துக் கொண்டு சில தொகுதிகளை ஒதுக்கினால் அவற்றில் மட்டும் தனது கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் நிறுத்தலாம்.

அதேநேரம் ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரசுக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கும்தான் கடுமையான போட்டி என்றாலும் கூட அந்த மாநிலத்தில் காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து உள்ளது.

இதனால் 2024 நாடாளுமன்ற மற்றும் மாநில தேர்தலில் பாஜகவின் வெற்றியை தடுப்பதற்காகவே ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 25 எம்பி சீட்களிலும் தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக திருமாவளவன் அறிவித்திருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

திமுகவில் அதிருப்தி..

2024 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வராவிட்டால் அதுதான் எனது கடைசித் தேர்தல் ஆக இருக்கும் என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அதிரடி காட்டியுள்ள நிலையில் ஆந்திராவில் விசிக சாதிக்குமா? என்பது தெரியவில்லை.

சரி! இந்த மூன்று மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உண்மையிலேயே வாக்கு வங்கி உண்டா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் பட்டியல் இன மக்களின் ஆதரவை நம்பி திருமாவளவன் களம் இறங்குவதுடன் கட்சிக்கு அத்தனை சட்டப்பேரவை தொகுதிகளிலும் நிர்வாகிகளை அவர் நியமித்து வருவதால் ஓரளவு வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க இயலாது.
அது யாருக்கு சாதகமாக அமையும், பாதகமாக அமையும் என்பதெல்லாம் வேறு விஷயம்!

dmk - updatenews360

அதேநேரம், அரசியல் என்பது அதிகாரத்தோடு தொடர்புடையதால் 360 டிகிரியிலும் பகை உண்டாகிறது என்று அவர் கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. திமுக கூட்டணியில் தனக்கு எதிராக சில சக்திகள் செயல்படுகின்றன என்பதை அவர் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. திருமாவளவன் இப்படி சொன்னதன் பின்னணி என்ன என்பது 2024 நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன்பாக வெளிச்சத்துக்கு வந்துவிடும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Views: - 484

0

0