பழைய குருடி கதவ திறடி… மீண்டும் சிக்கும் ராகுல் காந்தி : 2 நாள் கெடு விதித்த தேர்தல் ஆணையம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 6:22 pm
Rahul - Udpatenews360
Quick Share

பழைய குருடி கதவ திறடி… மீண்டும் சிக்கும் ராகுல் காந்தி : 2 நாள் கெடு விதித்த தேர்தல் ஆணையம்!!!

பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்தவகையில் ராஜஸ்தானில் நேற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். இதில், குறிப்பாக அவர் கூறியதாவது, நாட்டின் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது யார் கைகளுக்கு செல்கிறது என்பது கேள்வியாக உள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்பி பிக்பாக்கெட் அடிப்பது போல் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதானி பணத்தை எடுக்கின்றனர் என கூறியதாக தகவல் வெளியானது.

பிக்பாக்கெட்காரர்கள் ஒருவரின் பாக்கெட்டில் பணம் எடுக்க விரும்பினால், முதலில் அவர்கள் செய்வது கவனத்தை திசை திருப்புவதுதான். ஒரு பிக்பாக்கெட் செய்பவர் முன்பக்கத்திலிருந்து வந்து கவனத்தை திசை திருப்புகிறார். மற்றொருவர் பின்னால் நின்று பாக்கெட்டுகளிலிருந்து பணத்தை எடுக்கிறார். 3வது ஒருவர் தேவைப்படும் போது மிரட்டுகிறார். இதேபோல் தான் பிரதமர் கவனத்தை திசை திருப்புகிறார். அதானி பாக்கெட்டுகள் பணத்தை எடுக்கிறார். அமித்ஷா லத்தியை பயன்படுத்தி மிரட்டுகிறார் என பெயரை குறிப்பிடாமல் விமர்சித்ததாக கூறப்பட்டது.

ராகுல் காந்தியின் பேச்சு தற்போது ஆளும் பாஜகவை தூண்டியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டும், பீடை என குறிப்பிட்டு பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி நவ.25ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ராகுல் காந்தி விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், பிரதமர் மோடியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாக தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேர்தல் கூட்டத்தில் மோடி என்ற பெயர் குறித்து விமர்சனம் செய்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

பின்னர் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், மீண்டும் எம்பியாக பொறுப்பேற்றார். அதிலிருந்து தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், தற்போது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ‘பிட்பாக்கெட், பீடை’ என விமர்சனம் செய்ததற்காக பாஜக முறையிட்டதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், மீண்டும் சிக்குகிறாரா ராகுல் காந்தி என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Views: - 223

0

0