பாஜகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்… ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சர் படுதோல்வி ; முன்னாள் முதலமைச்சர் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 5:50 pm
Quick Share

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு கரன்பூர் தொகுதியை தவிர்த்து 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஆளும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது.

115 தொகுதிகளில் பாஜகவும், 69 தொகுதிகளில் காங்கிரஸூம், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அம்மாநில முதல்வராக முதன்முறை எம்.எல்.ஏ. பஜன்லால் ஷர்மா பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குர்மீத் சிங் கூனரின் மகன் ருபிந்தர் சிங் கூனரும், பாஜக சார்பில் அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கும் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், கரன்பூர் மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் பெருமையை தோற்கடித்துள்ளதாகவும், தேர்தல் சமயத்தில் வேட்பாளரை அமைச்சராக்கியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜகவுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 273

0

0