பொறுப்பில்லாமல் பேசுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; சனாதன விவகாரம்… திமுகவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 10:02 pm
Udhayanidhi - Updatenews360
Quick Share

சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்நிலையங்களிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், முன்பை விட சனாதனத்தை அழிப்பதில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது இந்து அமைப்பினருக்கு எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றியதைப் போல ஆகிவிட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங்கின் மகன் கரண் சிங், அமைச்சர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னராகவும் இருந்துள்ள கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி கூறியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. அதுமட்டுமின்றி, உலகிலேயே தமிழகத்தில் தான் சனாதன தர்மக் கோயில்கள் அதிகமாக உள்ளன.

உதாரணமாக, தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, சுசீந்திரம், ராமேஸ்வரம் என பலவற்றை சொல்லலாம். ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் இந்த மாதிரியான கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் கலாசாரத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் உதயநிதியின் கருத்துக்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 264

0

0