கர்நாடகாவில் திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு…

Author: kavin kumar
10 February 2022, 10:06 pm

கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கோரி போராட்டதில் ஈடுப்பட்டனர். ஆனால் பள்ளி ,கல்லூரிகள் நிர்வாகம், மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்தது. இதற்கு இஸ்லாமிய மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மாணவர்கள் சிலர் காவித்துண்டு அணிந்து வந்தனர். இதனால் அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா திக்சித், ஜே.எம்.காஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அப்போது, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹிஜாப் அணிந்து வந்ததற்காக மாணவிகள் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதிட்டார். இந்த நிலையில், கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், கல்லூரிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?